வேலூர் அருகே இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன்.. டீன் ஏஜ் பெண்கள் அறிய வேண்டிய பெரிய பாடம்
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் குடியாத்தம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் திருப்பதியில் திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் 17 வயதான அந்த சிறுமிக்கு இப்போது 18 வயது ஆகிறது. 17 வயது சிறுவனால் அந்த பெண் இப்போது கர்ப்பமாகி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
18 வயது நிறைவு பெறாத பெண் குழந்தைகள், காதல் வயப்படுவது இயல்பாக நடக்கிறது. அதேநேரம் பருவ வயதில் வரும் ஈர்ப்பை காதல் என்று நம்பி ஏமாந்துபோவது அதிகமாக நடக்கிறது. தான் காதலிக்கும் நபர் யார், அவரால் எப்படி வாழ முடியும், பொருளாதார ரீதியாக பலமானவரா, சிறுவனா, படித்தவரா என்று எதுவும் பார்க்காமல், கண்ட உடன் காதல் என்பதாக இருக்கிறது. இறுதியில் பெற்றோரை எதிர்த்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் சிறார்கள் எங்காவது ஒரு கோயிலில் திருமணம் செய்கிறார்கள். பின்னர் திருமணம் ஆகிவிட்டதே என்று நினைத்து எல்லை மீறுகிறார்கள்.

சில நாட்கள் எங்காவது நண்பர்கள் உதவியுடன் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்துகிறார்கள். ஆனால் ஆசை 60 வது நாள், மோகம் 30 நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப சுற்றிவிட்டு பெற்றோரை சந்திக்கிறார்கள். அப்போது பெண் கர்ப்பணியாகி இருப்பார்.மறுபக்கம் மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக போக்சோவில் இளைஞர் கைதாகும் சம்பவம் நடக்கிறது. அல்லது மைனர் பெண்ணிடம் அத்தமீறிய குற்றத்திற்காக சிறுவன் வழக்கை சந்திக்கிறார். இருவருக்கும் வழக்கால் வாழ்க்கையே தொலைந்து போகிறது. அப்படி ஒருசம்பவம் வேலூர் பகுதியில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், குடியாத்தம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடையில் கடந்த 2023-ம் ஆண்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது சிறுவனுக்கும், குடியாத்தம் பகுதியில் உள்ள 17 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து காதலை வளர்த்த நிலையில், இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டில் தெரிந்தது. இதனால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனால் இருவரும் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் திருமணம் தொடர்பாக அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் விரிவாக்க அலுவலர் கீதா அந்த வீட்டிற்கு சென்று விசாரித்தார். அப்போது இளம்பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பதும், தற்போது அவருக்கு 18 வயது நிரம்பியதும் தெரிய வந்தது. இதுகுறித்து அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications