கழிவறையில் செல்போனை யூஸ் பண்றீங்களா? வேலூர் சிஎம்சி மருத்துவர்கள் கொடுத்த எச்சரிக்கை.. உஷார்
வேலூர்: உலக புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றான வேலூர் சிஎம்சி மருத்துவமனை, கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
கழிவறையில் அமர்ந்துகொண்டு செல்போனைப் பயன்படுத்துவது பலருக்கும் சாதாரணமாகிவிட்டது. செய்திகள், சமூக ஊடகங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பார்ப்பதற்கு இது ஒரு வசதியான நேரமாகத் தோன்றலாம். ஆனால், இந்த பழக்கம் மறைமுகமான உடல்நல அபாயங்களைக் கொண்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதற்கும், மூலநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, கழிப்பறையில் நாம் செலவழிக்கும் நேரம் குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
வேலூர் சி.எம்.சி-யில் பயிற்சி பெற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார், "கழிப்பறையில் ஸ்மார்ட்போன்கள்: நீங்கள் புறக்கணிக்கக் கூடாத மறைந்திருக்கும் சுகாதார அபாயம்" என்ற தலைப்பில் கழிவறையில் செல்போன்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வை மேற்கொண்டிருந்தார். எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இந்த ஆய்வின் முடிவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, மலக்குடலில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் மூலநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று அவர் விளக்கியுள்ளார். கவனச்சிதறல் காரணமாக, விரைவாக முடிந்துவிட வேண்டிய கழிப்பறைப் பயன்பாடு, நாம் அறியாமலேயே நீண்ட நேரமாக மாறிவிடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் மூலநோய் அபாயம்" என்ற தலைப்பில் 'PLOS One' இதழில் வெளியான இந்த ஆய்வு பல டேட்டாக்களை கொடுத்திருக்கிறது.
ஆய்வில், பெரியவர்களில் மூன்றில் இருவர் கழிவறைக்கு ஸ்மார்ட்போனை எடுத்துச் செல்வது தெரிய வந்திருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாதவர்களைக் காட்டிலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருக்கும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. உணவு முறை, உடல் செயல்பாடு மற்றும் பிற வாழ்க்கை முறை காரணிகளைச் சரிசெய்த பிறகும், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூலநோய் வருவதற்கான அபாயம் 46% அதிகமாக இருந்தது என்று ஆய்வில் தெரிய வந்ததுாக டாக்டர் சுதீர் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் மற்றும் பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீகனெஸ் மருத்துவ மையத்தின் குடல்-மூளை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் திரிஷா பஸ்ரிச்சா, இன்ஸ்டாகிராமில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். ஸ்மார்ட்போன்களுக்கும் மூலநோய்க்கும் இடையே உள்ள தொடர்பை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பாதி பேர், தங்கள் போன் காரணமாக திட்டமிட்டதை விட அதிக நேரம் கழிப்பறையில் செலவிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தொலைபேசியைக் கழிப்பறைக்கு வெளியே வைக்குமாறும் அல்லது கண்டிப்பாக நேர வரம்பை நிர்ணயிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். செல்போனை கழிவறைக்கு எடுத்துச்செல்வது பழக்கமாகியிருப்பின், செல்போனுக்கு பதிலாக பத்திரிகை போன்ற எளிய வாசிப்புப் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மூலநோய் அபாயத்தைக் குறைக்க சில எளிய மாற்றங்களை டாக்டர் சுதீர் குமார் பரிந்துரைக்கிறார். கழிப்பறை நேரத்தை ஐந்து நிமிடங்களுக்குள் சுருக்கிக் கொள்வது சிறந்தது. நார்ச்சத்து நிறைந்த உணவு, போதுமான நீர் அருந்துதல் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை மூலநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications