கூட்டுறவு வங்கியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட கடன்.. வேலூரில் சுசிலாவை நெகிழ வைத்த மாவட்ட கலெக்டர்!
வேலூர்: குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட் (ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் வீடுகட்டும் பணிகள் விறுவிறுப்படைந்த நிலையில், ஒரு நெகிழ்ச்சி சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்துள்ளது? சுசிலா என்ற பெண்ணின் குடும்ப சூழலை கேட்டு கலெக்டர் மனம் வருந்திய நிகழ்வும் நடந்தது.
ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டம் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர குடியிருப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதார நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

இதனால் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஒரே நேரத்தில் கிடைப்பதால் சுகாதாரமும் வாழ்க்கை தரமும் மேம்பட்டது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம்
குடிசை வாழ்விலிருந்து கான்கிரீட் வீடுகளுக்கு மாற்றம் ஏற்பட்டு இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கை தரம் மெதுவாக மேம்பட்டு நம்பிக்கை உருவாகியுள்ளது. முக்கியமாக வீடு பெண்களின் பெயரில் வழங்கப்படுவதால் குடும்பத்துக்கு பாதுகாப்பும் பெண்களுக்கு மரியாதையும் அதிகரித்துள்ளது...
தமிழக சட்டப்பேரவையில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார்.
கூட்டுறவு வங்கி கடன்
இந்த திட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 3.5 லட்சம் ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்படுவதால் பயனாளிகள் தங்களுடைய வீடுகளை தாங்களே கட்டிக்கொள்ள வேண்டும்.. அரசு சார்பில் இருந்து நிதி மட்டுமே ஒதுக்கப்படும்.. கூடுதலாக நிதி தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக 1 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு 9.50 முதல் 10 சதவீதம் வட்டியில் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு கடந்த சில மாதங்களுக்கு உத்தரவிட்டது நினைவிருக்கலாம்..
குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் வீடுகட்டும் பணிகள் துரிதமடைந்தன..
வேலூரில் நெகிழ்ச்சி
இந்நிலையில் வேலூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. கிருஷ்ணா நகரை சேர்ந்த சுசிலா என்ற அந்த மூதாட்டிக்கு 70 வயதாகிறது.. இவரது மகன் இறந்துவிட்டார்..
எனவே இவரது மகளை அதாவது பேத்தியை தனியாளாகவே வளர்த்து வருகிறார். அண்ணா சாலையிலுள்ள பள்ளி முன்பாக தின்பண்டங்களை விற்று வருகிறார்.- அதில் கிடைக்கும் வருமானத்தில் பேத்தியை வளர்த்து வருகிறார்.. கிருஷ்ணாபுரத்தில் ரூ.400 வாடகை வீட்டில் வசித்தும் வருகிறார்.
பொதுக்கழிப்பறை ஆய்வு செய்த கலெக்டர்
இந்நிலையில், வஞ்சூர் பகுதியில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு பெற்ற சுசிலா, இந்த வீட்டுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்..
மனு அளித்த பிறகு, அங்கிருந்த பொதுக் கழிப்பறைக்கு சென்றுள்ளார் சுசிலா, ஆனால் திடீரென வழுக்கி அங்கேயே விழுந்துவிட்டார்.. சுசிலா கழிவறையில் விழுந்து கிடப்பது யாருக்குமே தெரியவில்லை.. இந்நிலையில், பொதுக்கழிப்பறை சுத்தமாக உள்ளதா ஆய்வு செய்ய வந்த மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, மூதாட்டி சுசிலா விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பொங்கலுக்கு புது வீட்டில் பால் காய்ச்சி
உடனடியாக உதவியாளர் மூலம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை வரவழைத்து தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு எதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தீர்கள்?என்று விசாரித்தபோதுதான், தான் மனு கொடுத்த விவரத்தை சொன்னார்..
சுசிலாவின் குடும்ப சூழலை கேட்டு மனம் வருந்திய கலெக்டர், பொங்கல் பண்டிகை முடிந்ததுமேஇ மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டு, புதிய வீட்டில் பால் காய்ச்ச ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
கலெக்டரின் உடனடி நடவடிக்கையால் நெகிழ்ந்த மூதாட்டி சுசிலா, அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.












Click it and Unblock the Notifications