வேலூருக்கு ஒரு டிக்கெட் கொடு.. டவுன் பஸ் ஏறி பயணம் செய்த விருந்தாளி.. அடுத்து நடந்த ஆச்சரியம்
வேலூருக்கு ஒரு டிக்கெட் கொடு என்று கேட்கும் விதமாக டவுன் பஸ் ஏறி அழையா விருந்தாளியாக பயணம் செய்துள்ளது ஒரு தெரு நாய். நாய் பஸ்ஸில் சிறிது தூரம் பயணிக்க தொடங்கிய நிலையில், தெரு நாய் ஒன்று பயணம் செய்வதை கண்ட பயணிகள் கூச்சலிட்டனர். பேருந்தை விட்டு இறங்க மறுத்த நாய், டிரைவர் பக்கத்தில் போய் நின்றதுடன், என்ஜின் அருகே உட்கார்ந்து கொண்டு பயணித்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
வடிவேலு தான் நடித்த ஒரு படத்தில் பேருந்து நடத்துனராக இருப்பார். அதில் பாம்பு ஒன்று ஏறி பேருந்தில் பயணிப்பது போல் காட்சியிருக்கும். அதாவது பாம்பாட்டி ஒருவர் பாம்புடன் பயணிக்க முயற்சி செய்வார். அதை கண்டு பொதுமக்கள் கூச்சலிடுவார்கள். ஒரு கட்டத்தில் அதை லாவகமாக வடிவேலு தடுப்பார். இதை சிரிப்புக்காக இந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் ஒரு டிக்கெட் கொடு என்று கேட்கும் விதமாக டவுன் பஸ் ஏறி அழையா விருந்தாளியாக ஏறி பயணம் செய்துள்ளது ஒரு தெரு நாய். வேலூர் மாவட்டம் காட்பாடி - குடியாத்தம் இடையே இயங்கிவரும், அரசு டவுன் பஸ் ஒன்று மிகவும் பழுதான நிலையில் ஓடிக்கொண்டு இருந்தது. இதை புதியதாக மாற்றவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று அந்த பகுதியில் தானியங்கி கதவுகளுடன் கூடிய புதிய டவுன் பஸ் அண்மையில் விடப்பட்டது. இந்த பஸ் கே.வி.குப்பம் வழியாக சென்னறாயனபள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று சில பயணிகளை இறக்கி விட்டது.
அப்போது குடியாத்தம் செல்ல ஒரு பயணி ஏறியிருக்கிறார்.. அப்போது முன்னதாக ஒரு தெரு நாய் திடீர் என்று பஸ்சின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே ஏறியது. திடீரென விருந்தாளியான கதவு மூடப்போகும் சமயத்தில் அந்த நாய் ஏறியதும் பஸ்சின் தானியங்கி கதவுகள் மூடி பஸ் புறப்பட்டு சென்றது. நாய் ஏறியதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது தூரம் சென்றதும் பஸ்சுக்குள் நாய் சத்தம் கேட்டிருக்கிறது. நாயை கண்ட பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் அவர்கள் இருக்கையை விட்டு இங்கும் அங்குமாக ஓடினர்.

இதனிடையே பேருந்தின் பின்பக்கம் ஏறிய நாய் இருக்கைகளுக்கு இடையே மின்னல் வேகத்தில் நகர்ந்து சென்று டிரைவரிடம் வந்தது. பின்னர், என்ஜின் மீது ஏறி படுத்துக்கொண்டது. அதை அங்கிருந்து விரட்டியதும் டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கிக்கொண்டது. தொடர்ந்து நாயை மக்கள் அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கி விட்டனர்.
பின்னர் தானியங்கி கதவை மூடிய பின்னர் குடியாத்தம் நோக்கி பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்தில் ஏறிய நாய், மிக அமைதியாக அமர்ந்திருந்துள்ளது. யாரையும் பாரத்து குரைக்காமல் கூலாக நிலைமையை கையாண்டதை கண்டு மக்கள் திகைத்து போனார்கள். இந்த சம்பவத்தால் வேலூர் குடியாத்தம் பஸ்ஸில் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications