கதிர் ஆனந்த் கல்லூரியில் 44 மணி நேரம் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. ஆபீசர்கள் கையில் ஃபைல்கள்!
வேலூர்: திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லுாரியில், நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சுமார் 44 மணி நேரம் நடந்த இந்த ரெய்டு நிறைவடைந்துள்ளது. பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு, வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் காலை சோதனையை தொடங்கினர்.

துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளிலும் நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இதனால், அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனால், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதுதொடர்பாக கதிர் ஆனந்த் தரப்பிலிருந்து இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என திமுக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை திமுகவினர் சோதனை செய்த பிறகே வீட்டினுள் ரெய்டு நடத்த அனுமதித்தனர். சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் சோதனையைத் தொடங்கினர்.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டை உடைக்க, இரும்பு கடப்பாரை, சுத்தியல் போன்றவற்றை வீட்டினுள் கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. நள்ளிரவு 1.20 மணியளவில் சோதனை நிறைவடைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.
திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடியில் உள்ள பொறியியல் கல்லுாரியில், 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை தொடர்ந்து வந்தனர் கல்லுாரி நிர்வாகம் செய்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், கல்லுாரி பணம் வைக்கும் அறை ஆகியவற்றை சோதனை செய்தனர்.
கல்லுாரியில், நேற்றும் இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்தது. நேற்று காலை வழக்கம்போல் கல்லுாரி திறக்கப்பட்டது, ஊழியர்கள், மாணவ - மாணவியர் உள்ளே சென்றபோது பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். தொடர் சோதனை நேற்று நள்ளிரவில் முடிவுற்றது.
8 கார்களில் வந்திருந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டனர். கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கல்லுாரி பணம் வைக்கும் அறையில், கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டறிந்து, வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கல்லுாரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொங்கல் பண்டிகையையொட்டி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த போனஸ் மற்றும் சம்பளத் தொகை மற்றும் கல்லுாரி மாணவ மாணவியரிடம் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணம் என கல்லுாரி நிர்வாக ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications