திருப்பத்தூரில் தங்க நகை அடகு வைத்த அத்தனை பேருக்கும் ட்விஸ்ட்.. அதிர வைத்த நகை மதிப்பீட்டாளர்
வேலூர்: திருப்பத்தூர் அருகே கருப்பனூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் திருப்பத்தூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர் சுமார் 200 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1 கோடியே 30 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 42 போலி வங்கி கணக்குகள் மூலம் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் மதிப்பு விறுவிறு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நகை வாங்கியவர்கள் பலருக்கும், அவர்கள் வாங்கிய விலையை விட அதிகமாகவே அடகு வைப்பதன் மூலம் பணம் கிடைத்து வருகிறது. இதனால் நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதையே பலரும் விரும்புகிறார்கள்.

அதேநேரம் போலி நகைகளை அடகு வைத்து நகை மோசடி செய்வது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வங்கிகள் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியே நகைகளை மதிப்பீடு செய்து கடன் வழங்குவதை உறுதி செய்கின்றன. ஆனால் இந்த பணிகளை செய்யும் சில நகை மதிப்பீட்டாளர்கள் போலி நகைகளுக்கு பணம் கொடுப்பது அவ்வப்போது நடக்கிறது. போலி நகைகளை அவர்களே வங்கியில் மற்றவர்கள் பெயரில் அடகு வைத்து கோடிகளில் திருடுகிறார்கள்.. அப்படி ஒரு சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் அருகே கருப்பனூர் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் பாஸ்கர் என்பவர், திருப்பத்தூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு தெரிந்த நபர்களை ஏற்பாடு செய்து 42 போலி வங்கி கணக்குகள் மூலம் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து அதன் மூலம் கடன் பெற்றிருக்கிறார்.
இவ்வாறு பாஸ்கர் சுமார் 200 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1 கோடியே 30 லட்சம் வரை மோசடி செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் சார்பில் மாவட்ட குற்றப்பிரிவில் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை நேற்று கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதமும் இதுபோன்ற ஒரு சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தது.. மயிலாடுதுறையில் 57 வயதாகும் ஜீவானந்தம் என்பவர் மயிலாடுதுறையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்தார் வங்கியில் நகைகளை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஜீவானந்தம் நன்றாக பழகி அவர்களிடம் தனது நகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களின் பெயரில் அடகு வைத்து கொடுக்கும்படி கேட்பாராம்
இதை நம்பிய வாடிக்கையாளர்களில் சிலர் ஜீவானந்தம் தந்த நகைகளை(போலி நகைகள் என தெரியாமலேயே) அடகு வைத்து வங்கி ஆவணங்களில் கையொப்பமிட்டிருந்தார்கள். அந்த போலி நகைகளுக்கான தரம் பற்றிய உண்மை சான்றிதழை மோசடியாக அசல் தங்க நகைகளுக்கு உள்ளது போல ஜீவானந்தம் அளித்துள்ளாராம். வாடிக்கையாளர்கள் பெயரில் அடகு வைத்த போலி நகைகளுக்கான நகை கடன் ரசீதுகளை ஜீவானந்தம் தானே வைத்துக் கொண்டு காலக்கெடுவிற்கு ஏற்றார்போல வெவ்வேறு வாடிக்கையாளர்களின் பெயரில் மாற்றி வைத்து மோசடி செய்து வந்ததை அதிகாரிகள் ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.
வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.41 லட்சத்து 23 ஆயிரத்து 721-ஐ ஜீவானந்தம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் ஜீவானந்தத்தை கைது செய்த போலீசார், அவரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications