தேர்தல் செலவு மிச்சம்! திமுக வேட்பாளருக்கு அடித்த ஜாக்பாட்! போட்டியின்றி மாநகராட்சி கவுன்சிலர்!
வேலூர்: வேலூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி மாமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார்.
அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திமுக வேட்பாளர் ஒரு ரூபாய் தேர்தல் செலவின்றி கவுன்சிலராகி விட்டார்.
21 மாநகராட்சிகளில் திமுகவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாக வேலூரில் நடந்த இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மொத்தம் 505 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் 1-வது மண்டலத்திற்குட்பட்ட 8-வது வார்டில் திமுக சார்பில் சுனில் குமார் என்பவர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட 6 கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்தனர்.

வேட்புமனு பரிசீலனை
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது பல்வேறு காரணங்களால் வேலூர் மாநகராட்சி 8-வது வார்டில் அதிமுக, பாஜக, பாமக, வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் சுனில்குமார் என்பவரது வேட்புமனு மட்டுமே தேர்தல் அலுவலரால் ஏற்கப்பட்டது. மற்ற வேட்பாளர்கள் சில விவரங்களை குளறுபடியாக தெரிவித்திருந்தது வேட்புமனு பரிசீலனையின் போது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செலவு மிச்சம்
இதனிடையே போட்டியின்றி வேலூர் மாநகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சுனில்குமார் தேர்வாகி இருக்கிறார். எல்லா வேட்பாளர்களும் தேர்தல் செலவுகளால் திணறி வரும் சூழலில், பிரச்சாரம் உள்ளிட்ட எதற்காகவும் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் மாநகராட்சி கவுன்சிலராகி இருக்கிறார் சுனில்குமார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் வேலூர் மாநகராட்சியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது திமுக.

துரைமுருகன் ஆதரவாளர்
வேலூர் மாநகராட்சி 8-வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வாகியுள்ள சுனில் குமாருக்கு திமுகவினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் தீவிர ஆதரவாளர் சுனில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications