ஆளுநர் பாவம்.. அண்ணாமலை அறிக்கை உப்பு சப்பில்லாதது.. ரவுண்டு கட்டி அடிக்கும் அமைச்சர் துரைமுருகன்!
வேலூர்: கனிம வளக்கொள்ளை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளது உப்பு சப்பில்லாத அறிக்கை என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் ,ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1,248 பயனாளிகளுக்கு ரூ.15. 41 கோடி கடன் உதவியை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

கடன் தள்ளுபடி பற்றி துரைமுருகன்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், கூட்டுறவுத் துறையில் மக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தால் எப்படி அரசு நடக்கும். பயிர்கடன், கால்நடை கடன் மாற்றுத்திறனாளிகள் கடன் இப்படி வாங்கிய அனைத்து கடனையும் எப்படி ஒரு அரசால் தள்ளுபடி செய்ய முடியும்.

இந்த எண்ணம் வரக்கூடாது
தமிழக அரசு சரியாக நடக்க வேண்டும் என்றால் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும். எப்படி இருந்தாலும் தள்ளுபடி செய்வார்கள் என்ற நிலைமை வந்துவிடக் கூடாது. கடனை திருப்பி கட்டும் நல்ல உணர்வோடு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பாவம்
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், தென் பென்னை ஆறு நீர் பகிர்வு குறித்து பேச செயலாளர் சென்றுள்ளார். அதனால் அந்த விவகாரம் குறித்து பின்னர் பேசலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து தமிழக ஆளுநர் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது குறித்த நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாவம் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் எதையாவது சொல்லுவார் என துரைமுருகன் நக்கலாக பதிலளித்தார்.

உப்பு சப்பில்லாத அறிக்கை
மேலும், தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது. அண்ணாமலை கனிம வளக்கொள்ளை தொடர்பாக ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கட்டும். அப்போது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை அறிக்கை
சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரியில் இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கொரட்டகிரியில் கனிம வளங்கள் கொள்ளையடித்த லாரிகளை சிறைபிடித்து, கொட்டும் மழையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாஜக போராட்டம்
கனிம வளக்கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்தி, கொரட்டகிரி மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜக சார்பாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications