துணை முதல்வர் உதயநிதி.. ஒரே கேள்வி தான்.. சட்டென டென்சனாகி எழுந்து போன அமைச்சர் துரைமுருகன்
வேலூர்: ராணிப்பேட்டை அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அணைகள் தொடர்பாக, நீர்பாசனம் தொடர்பாக, தர்மபுரி மக்களுக்கு காவேரி நீர் விடுவது தொடர்பாக என பல விஷயங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் உதயநிதி துணை முதல்வராவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சினிமாவில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தார். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கினார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி , தமிழகம் புதுவையில் 40க்கு 39 தொகுதிகளில் வென்றது. இதைடுத்து உதயநிதிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி அதே ஆண்டு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். அந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஆனால் 2021ல் உதயநிதி அமைச்சராவார் என்று திமுகவினர் எதிர்பார்த்த நிலையில், அவர் அமைச்சராகவில்லை.. எனினும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு பணிகளில் பங்கேற்று வந்தார். அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினார்கள். இதன்பின்னர்
உதயநிதியை அமைச்சராக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.
அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகியவை வழங்கப்பட்டன. இதில் சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை என்பது தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், அனைத்து துறைகளும் உள்ளடக்கிய நிர்வாகி பணி ஆகும். முதல்வர் ஸ்டாலின் வசம் இருந்த இந்த துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உதயநிதி முடிவெடுக்க முடியும் என்கிற நிலை உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் , நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபற்றி பலமுறை தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் அத்தனை முறையும் இது வதந்தி என்றே முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஒருமுறை இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, 'உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை' என்று கூறினார்.
இதனிடையே முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டு விடுவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப ஆகஸ்டு 19-ந் தேதி அன்று துணை முதல்வராகக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. அண்மையில் கூட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், வெளியிட்ட பதிவில் துணை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் திமுகவில் மூத்த அமைச்சரான துரைமுருகனை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் துரைமுருகனோ, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராவதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதியை துணை முதல்வராக, முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று அண்மை காலத்தில் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.
அதேநேரம் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் எப்போது பதவி ஏற்பார் என்பது குறித்த கேள்விகளுக்கு கட்சியின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் மறுத்தே வருகிறார். ராணிப்பேட்டை அருகே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அணைகள் தொடர்பாக, நீர்பாசனம் தொடர்பாக, தர்மபுரி மக்களுக்கு காவேரி நீர் விடுவது தொடர்பாக என பல விஷயங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் உதயநிதி துணை முதல்வராவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதி எப்போது துணை முதல்வர் ஆவார் என்பது குறித்த கேள்விக்கு , துரைமுருகன் பதில் அளிக்ககாதது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எனினும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி அன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 'உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனை துரைமுருகனும் முன்மொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். எனவே திமுகவினர் இன்னும் ஒருவாரம் வரை அதற்கு காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications