தவறு செய்ததால் விஜய்க்கு வெளியே வர பயம்.. அமைச்சர் துரைமுருகன் சுளீர் கருத்து
வேலூர்: கரூர் தவெக விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் இன்னும் ஓயவில்லை. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, தவெகவை தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று ஆறுதல் கூறி தங்களால் முடிந்த நிவாரணம் அளித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற 11வது நாளான இன்று தான் விஜய், அந்த மக்களிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், விஜய்க்கு பயம். அதனால் தான் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் விவாதங்களை ஏற்படுத்தியது.

விஜய் வீடியோ கால்
தவெக கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதற்கு காலம் தாழ்த்தியது மற்றும் கூட்டம் நடைபெற்ற தினம் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தவெக தரப்பில் புகார் கூறப்பட்டது. ஏன் கரூரில் மட்டும் இந்த பிரச்சனை ஆனது. முதலமைச்சருக்கு பழிவாங்க வேண்டும் என்றால் என்னை கைது செய்து கொள்ளட்டும் என்று விஜயே வீடியோவில் கூறியிருந்தார். மறுபக்கம் தவெக பொறுப்புணர்வுடன்நடந்து கொள்ளவில்லை. கட்சி கட்டமைப்பு இல்லை என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் புகார் எழுந்தது.
சம்பவம் நடைபெற்று இன்றுடன் 11 நாட்களாகிவிட்டன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறிவிட்டனர். தவெகவில் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூட கரூர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 2 வாரங்களாகும் நிலையில், இன்று விஜய் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்த மக்களை நேரில் கூட பார்க்க முடியவில்லையா என்று மீண்டும் விஜய் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
தன் நெஞ்சே தன்னை சுடுவதால்
இந்நிலையில் வேலூரில் உள்ள தன் இல்லத்தில் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நேரில் செல்லாமல், வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் கூறிய துரைமுருகன் "தான் குற்றம் புரியவில்லை என்றால், தைரியமாக தன்னுடைய தோழர்களுடன் துயர சம்பவம் நடைபெற்ற வீடுகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். தன் நெஞ்சே தன்னை சுடுவதால் அவருக்கு வெளியே வர பயம். அதனால் தான் விஜய் வீடியோ காலில் பேசுகிற நிலை வந்துள்ளது. இதில் சொல்வதற்கு வேறு என்ன உள்ளது." என்றார்
அப்போது கச்சத்தீவு பிரச்சனை தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துரைமுருகன், "கச்சத்தீவு பற்றி பாஜகவுக்கு ஒன்றும் தெரியாது. யாரோ சொல்லிக் கொடுத்து நயினார் நாகேந்திரன் தவறான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்." என்று கூறி சென்றார்.












Click it and Unblock the Notifications