தமிழர்கள் காட்டுமிராண்டிகளா.. வடநாட்டுக்காரன் குளிக்காத பரம்பரை.. வேலூரில் கொந்தளித்த துரைமுருகன்!
வேலூர்: தமிழர்களை பார்த்து காட்டுமிராண்டி என்று சொன்ன மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். வடநாட்டுக்காரன் குளிக்காத பரம்பரை என்று காட்டமாக சொன்ன துரைமுருகன், நீங்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த போது தமிழர்கள் உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையில் கருத்து மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்பி-க்களை, ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமில்லாதவர்கள் என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய பின் உடனடியாக வார்த்தைகளை திரும்ப பெறுவதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது துரைமுருகன் பேசுகையில், ஒரு மத்திய அமைச்சர் சபையில் எழுந்து தமிழர்களை காட்டுமிராண்டி என்று சொல்கிறார் என்றால், எவ்வளவு கொழுப்பு இருக்கும்.
எங்களை பார்த்தா காட்டுமிராண்டினு சொல்கிறீர்கள்.. எங்களின் மூதாதையர்கள் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்பே சிந்துசமவெளி நாகரீகத்தை கண்டுபிடித்தவர்கள். நீங்கள் இந்தி தேசமாக மாற்ற நினைக்கிறீர்கள்.. நாங்கள் யாதும் ஊரே.. யாவரும் கேளிர் என்று சொல்கிறோம். அவன்தான் தமிழன். நாங்கள் ஒவ்வொரு நாளும் 2 முறை குளிக்கிறோம்.
எங்கள் ஊரில் குளிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். நீங்கள் குளிச்சுருக்கீங்களா.. குளிக்காத நாற்றம் எடுத்த பரம்பரை நீங்கள்.. புறத்திலும், அகத்திலும் நாகரீகமின்றி செயல்படுகிறீர்கள். இந்திய அரசியல் வரலாற்றில் மத்திய அமைச்சரை பார்த்து நாவடக்கம் தேவை என்று சொன்ன ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். இந்தியாவில் மக்கள் தொகை குறையவே இல்லை.
மக்கள் தொகையை குறைத்தால் மட்டுமே பணம் என்று மத்திய அரசு கூற வேண்டும். ஆனால் மாறாக யார் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்களோ, அவர்களுக்கு பணம், மக்கள்தொகையை சரியாக கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு பணம் இல்லை என்று சொல்கிறார்கள். இந்தியை படிப்பதும், படிக்காததும் எங்களின் இஷ்டம். உங்களை போலவே நாங்களும் இந்தியாவின் குடிமகன்தான்.
அதனால் எங்களை சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. இதனை கேட்டதற்குதான் தமிழர்களை பார்த்து காட்டுமிராண்டிகள் என்று சொன்னார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். நீங்கள் காட்டுமிராண்டுகளாக இருந்த போது, தமிழர்கள் உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications