அதிகாலை 2 மணிக்கு.. வலியால் துடித்த ஆதரவற்ற பெண்.. பிரசவம் பார்த்த பெண் போலீஸ்.. வேலூரில் நெகிழ்ச்சி
வேலூர்: வேலூர் அருகே அதிகாலை பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற பெண்ணிற்கு பெண் தலைமை காவலர் ஒருவர் பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு எதிரே இருந்த ஜவுளிக் கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வலியால் துடித்து அழுது கொண்டிருந்தார். பெண் ஒருவர் அழும் சப்தம் கேட்டு இளவரசி எங்கே என தேடி சென்றார்.

பிரசவ வலி
அப்போது அந்த பெண்ணிடம் சென்ற போதுதான் அவர் பிரசவ வலியால் துடிக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணுடன் ஏற்கெனவே 6 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. உடனே போலீஸ் நிலையத்திற்கு ஓடி வந்த இளவரசி, அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் பத்மநாதன், பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் சென்றார்.

பெண்ணுக்கு பிரசவம்
அவர்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையையும் தாயையும் மேல் சிகிச்சைக்கால வேலூரில் உள்ள பென்ட்லாண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண் கூறுகையில், திருமணமான சில மாதங்களில் கணவர் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

திருமண செலவை
எனது அண்ணன்கள் திருமண செலவை பிச்சையெடுத்தாவது தர வேண்டும் என வற்புறுத்தினர். இதனால் நான் இந்த பகுதியில் பிச்சை எடுத்து வருகிறேன் என்றார். இதையடுத்து பெண் போலீஸ் இளவரசி, அந்த குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.

பிரசவம் பார்த்த போலீஸார்
ஆதரவற்ற பெண்ணிற்கு போலீஸார் பிரசவம் பார்த்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அந்த பெண் போலீஸுக்கும் அவருடன் பிரசவம் பார்த்த பிற போலீஸாருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications