பாலியல் சைக்கோவால் பறிபோன உயிர்.. ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணின் சிசு உயிரிழப்பு! அதிர்ச்சி
வேலூர்: ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்ட சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த நான்கு மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து அந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக நேற்று கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்குச் சென்றபோது அங்கு அந்த பெண்ணுக்கு ஒரு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அந்த கர்ப்பிணி சத்தம் போட்டதால் கோபமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர் காட்பாடி வந்ததும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கிறார்.
படுகாயம் அடைந்த அந்தப் பெண் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ரயில்களில் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் தொடர்பான புகைப்படங்களை போலீசார் காண்பித்த போது குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் குறித்து அந்த பெண் அடையாளம் காட்டினார். இதை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கேவி குப்பம் அருகே ஹேமராஜ் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே பல பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அந்த நபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்த போது கால் தடுக்கி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவரை திருப்பத்தூர் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். அவருக்கு இடது காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர். சிகிச்சைக்கு பிறகு அவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக அவரது கருவில் இருந்த சிசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இன்று நண்பகலில் அந்தப் பெண்ணுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது குறித்து அந்த பெண்ணிடம் கூறியுள்ளனனர். தொடர்ந்து இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை அகற்றப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications