ராணிப்பேட்டை மாணவி கொலை! காதலை ஏற்காததால் இளைஞர் வெறிச்செயல்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர், காதலை ஏற்காததால் கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
பெண்கள் மீதான வன்கொடுமை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் சிறுமியின் கொலை சம்பவம் நடந்திருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் இந்த கொடூரம் நடந்திருக்கிறது. 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது உறவினரான 16 வயது சிறுமியுடன் வீட்டில் தனியே இருந்திருக்கிறார். இன்று மாலை அவரது வீட்டிற்கு கையில் கத்தியுடன் வந்த 21 வயது இளைஞர் சுப்பிரமணி, கதவை தாழிட்டு 15 வயது சிறுமியை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இளைஞரிடமிருந்து தப்பிக்க சிறுமி எவ்வளவோ போராடியும் முடியவில்லை.
இறுதியில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற 16 வயது சிறுமிக்கும் கத்தி குத்து ஏற்பட்டிருக்கிறது. அவர் சத்தம் போட்டு கூச்சலிடவே, இளைஞர் சுப்பிரமணி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அதற்குள் கூடிய ஊர் மக்கள் சுப்பிரமணியை பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்திருக்கின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் காதலை ஏற்காததால் சுப்பிரமணி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்திருக்கிறது. இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையைச் சேர்ந்தவர் என்பதும், தாக்குதல் நடத்தியபோது மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து சுப்பிரமணியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications