ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா? வேலூர் ஜில்லாவில் வாயை பிளக்க வைத்த டாஸ்மாக் மதுவிற்பனை
வேலூர்: காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று டாஸ்மாக் உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அக்டோபர் 1ம் தேதி அன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கடைகளில் அடுத்த நாள் விடுமுறை என்றால், முதல் நாளில் அதிக விற்பனை நடப்பது இயல்பு, அதேநேரம் முக்கியமான விடுமுறைகள் வரும் போது டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்றால், வசூல் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு திங்கள்கிழமையான நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதுமே ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிமாக இருந்து. இதனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை காரணமாக வசூலும் அதிகமாகவே இருந்திருக்கும்.
இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை மிக அதிக அளவில் இருந்துள்ளது. மதியம் 12 மணி தொடங்கி இரவு விற்பனை நேரம் முடியும் வரை குடிமகன்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துள்ளது. பலரும் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை உற்சாகத்துடன் வாங்கி சென்றார்கள்.
நேற்று விடுமுறை என்பதால், நேற்று முன்தினமான ஞாயிறு அன்று பலரும் வழக்கத்தை விட கூடுதலாக மது, பீர் வகைகளை வாங்கி கொண்டு சென்றனர். குவாட்டர், ஆப் என பாட்டில்கள் அதிக அளவில் விற்பனையாகியதாக கூறப்படுகிறது.
வேலூர் டாஸ்மாக் கோட்டத்தை பொறுத்தவரை வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 106 டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.2 கோடிக்கு கூடுதலாக விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6 கோடியே 15 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாகவும் வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல் அரக்கோணம் டாஸ்மாக் கோட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 83 டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது என்றும் இங்கு மற்ற நாட்களில் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. ஒட்டுமொத்தமாக வேலூர் ஜில்லாவில், அதாவது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் ரூ.10 கோடியே 15 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications