ஜோலார்பேட்டை ரயில்வே ஊழியருக்கு.. மகனின் நண்பன் செய்த நம்ப முடியாத துரோகம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ரயில்வேயில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மகன் ராகுல் கல்லூரியில் படித்து வருகிறார். ராகுல் கல்லூரிக்கு சென்ற நிலையில், ரயில்வே ஊழியரின் கார், மடிக்கணினி மயமாகியது. எப்படி காணாமல் போனது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, உண்மை என்ன என்பது அவருக்கு தெரியவந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியை சேர்ந்த 47 வயதாகும் ரமேஷ் என்பவர் ரயில்வே ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராகுல் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 24ம் தேதி அன்று ராகுல் கல்லூரிக்கு சென்றுவிட்டார். ரமேஷ் உள்பட வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே வேலையாக சென்றுவிட்டார்கள்.

பின்னர் மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் நிறுத்தி இருந்த கார் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் குடும்பத்தினர், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர். அதில் ராகுலின் நண்பனான சாந்தநகர் பகுதியை சேர்ந்த ராஜபிரபு என்பவரின் மகனான 19 வயதாகும் நிரஞ்சன் என்பவர் காரை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து ரயில்வே ஊழியர் ரமேஷ் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் நேரில் வந்து, கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் ராகுலின் நண்பனான நிரஞ்சனின் செல்போன் சிக்னலை வைத்து ஓசூரில் இருந்த அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜோலார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், நிரஞ்சன் கடந்த செப்டம்பர் 25ம் தேதி அன்று மதியம் தனது நண்பரான ராகுலை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவர் எங்கே இருக்கிறாய்? எனக் கேட்டதும், உன்னை பார்க்க வீட்டின் அருகே இருப்பதாக நிரஞ்சன் கூறி உள்ளார். அதற்கு ராகுல், தான் கோவையில் கல்லூரியில் இருப்பதாகவும், தனது தந்தை வேலைக்கு சென்று விட்டதாகவும், தாயார் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், வீட்டில் யாரும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து நிரஞ்சன் கேட்டை திறந்து உள்ளே சென்று வீட்டின் சாவி இருக்கும் இடம் தெரிந்து அதனை எடுத்து கதவை திறந்து கார் சாவி மற்றும் மேஜை மீது இருந்த மடிக்கணினியை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு வெளியில் நிறுத்தியிருந்த காரையும் ஓட்டிச்சென்றது தெரியவந்தது.
ரயில்வே ஊழியரின் கார், மடிக்கணினியை அவருடைய மகனின் நண்பனே திருடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications