வேலூர் மாவட்டத்தில் வீடு, கட்டிடம் கட்டுவோருக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி முக்கிய அறிவிப்பு
வேலூர்: வேலூர் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் பொதுமக்கள் முறையான அனுமதி பெற்று புதிய கட்டிடங்கள் மற்றும் விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அல்லது விரிவாக்கம் செய்யப்பட்டால் அரசு விதிகளின்படி கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் அகற்றப்படும் என்று
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாகும். அவற்றின் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தொகை வருவாய்கள் கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.

இதன்படியே, மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதியை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் 2.10.2023 முதல் தமிழ்நாடு அரசின் மூலம் ஒற்றை சாளர முறையிலான இணையதளம் (https://onlineppa.tn.gov.in) கொண்டு வரப்பட்டு இணையதளம் வாயிலாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில் 3,500 சதுர அடி வரையிலான கட்டிட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு உடனடி பதிவின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி சுய சான்று முறையில் இணையதளம் வாயிலாக அனுமதி அளிக்கப்படுகிறது. 2,500-10,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி மூலம் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் நகர கிராம திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) மற்றும் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி வாயிலாக (Non self certificate) அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கிராம ஊராட்சிகளில் புதியதாக அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் முறையான மின்கம்பங்கள், குடிநீர் வடிகால்கள் ஆகிய அடிப்படை வசதிகள் இருத்தல் மற்றும் திறந்த வெளி நிலங்கள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு இருத்தல் நிறைவேற்றப்பட்டு அளிக்கப்படுகிறது. இருப்பின் இணையதளம் ஆகிய நிபந்தனைகள் வழியாக அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டடங்களுக்கு அனுமதி பெற்றுத்தான் கட்டிடம் கட்ட வேண்டும்.
ஆனால் வேலூர் மாவட்டத்தில் சிலர் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவது, வீடு கட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அல்லது விரிவாக்கம் செய்யப்பட்டால் அரசு விதிகளின்படி கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் அகற்றப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றுக்கான வரைபட அங்கீகாரம் இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை பயன்படுத்தி பொதுமக்கள் முறையான அனுமதி பெற்று புதிய கட்டிடங்கள் மற்றும் விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அல்லது விரிவாக்கம் செய்யப்பட்டால் அரசு விதிகளின்படி கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் அகற்றப்படும்.
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிதாக தொழிற்சாலை அமைக்க இணைய வழியில் விண்ணப்பம் செய்து கலெக்டரின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே இணையவழி சேவையினை பயன்படுத்தி முறையாக அனுமதி பெற்று புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனுமதி பெறாமல் ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை விரிவாக்கம் செய்தால் அரசு விதிகளின்படி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு கலெக்டர் சுப்புலெட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications