9 நாள் பெண் சிசு மர்ம மரணம்! "வெட்டப்பட்ட பப்பாளி மரம்" தாத்தாவுக்கு வந்த சந்தேகம்! வெலவெலத்த வேலூர்
வேலூர்: வேலூர் அருகே பிறந்து 9 நாட்களான பச்சிளம் பெண் குழந்தையை பெற்றோரே விஷப்பால் ஊற்றி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதே அந்த தம்பதி காட்டுக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதி ஏரியூர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜீவா(எ) சேட்டுக்கும்.. 30 வயதான இவருக்கு ஒடுகத்தூர் அடுத்த ஆத்துமேடு பகுதியை சேர்ந்த டயானா (25) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு டயானா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 27ம் தேதி டயானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவர் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்திக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. .
பெண் குழந்தை: டயானாவிற்கு ரத்த அளவு குறைந்து இருந்ததால் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டது. 9 நாட்களுக்கு பிறகு தாயும் குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். கணவர் ஜீவா அவர்களை நேரில் சென்று அழைத்து வந்துள்ளார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று அந்த தம்பதி எதிர்பார்த்து இருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால் பெண் சிசுவை கொலை செய்ய இந்த கொடூர தம்பதி முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வீட்டின் அருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டிய இந்த தம்பதி, அதில் வடிந்த விஷம் நிறைந்த பாலை எடுத்து குழந்தைக்கு கொடுத்துள்ளனர். தங்களுக்கு பிறந்த குழந்தை என்று கூட பார்க்காமல் கொடூர நெஞ்சம் படைத்த தாயும், தந்தையும் அந்த பிஞ்சுக்கு நஞ்சை ஊற்றியுள்ளனர். அந்த பாலை கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தைக்கு வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து உயிரிழந்தது.
மரணம்: அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பெண் எதுவுமே நடக்காதது போல நாடகமாடியிருக்கிறார். தனது பெற்றோருக்கு போன் செய்த டயானா, குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக சொல்லி அழுது நடித்துள்ளார். தந்தாவும் பாட்டியும் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளனர். குழந்தை இறந்து கிடந்த நிலையில், இது குறித்து டயானாவின் தந்தை சரவணன் அவர்களிடம் கேட்டுள்ளார்.
2 வயதே ஆன மூத்த மகள் போர்வையை எடுக்கும் போது அது கைக்குழந்தை முகத்தில் விழுந்துவிட்டதாகவும் இதனால் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துவிட்டதாக சொல்லி நாடகமாடியுள்ளனர். வீட்டில் குழந்தை இறந்த விஷயத்தை ஜீவா தனது தந்தையிடம் கூட சொல்லவில்லையாம். அவசர அவசரமாக வீட்டில் அருகிலேயே பள்ளம் தோண்டி குழந்தை சடலத்தை புதைத்து உள்ளனர்.
தாத்தாவுக்கு வந்த சந்தேகம்: இதனால் சந்தேகமடைந்த டயானாவின் தந்தை சரவணன் உடனடியாக இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். தனது பேத்தி மர்மமான முறையில் மூக்கு, வாயில் ரத்தம் வடிய இறந்து கிடந்ததாகவும் இதை யாரிடமும் சொல்லாமல் புதைத்துவிட்டதாகவும் கூறியிருந்தனர். மேலும், பேத்தியின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
தப்பி ஓட்டம்: இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேப்பங்குப்பம் போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது ஜீவா- டயானா தம்பதி பேசி வைத்தது போல வார்த்தை மாறாமல் ஒரே பதிலை கூறி இருக்கிறார்கள். மேலும், குழந்தை இறந்த துக்கம் துளியும் இல்லாமல் வழக்கம் போல வீட்டு செய்து கொண்டிருந்தனர். அப்போது இரவு இருட்டாக தொடங்கியதும் டயானா திடீரென தனது முதல் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
டயானா மாயமாகிவிட்டதை போலீசார் கவனிப்பதற்குள் ஜீவாவும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் அருகே இருந்த காட்டிற்குள் ஓடிவிட்டனர். போலீசார் அங்கே வெட்டப்பட்ட பப்பாளி மரத்தையும் கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகளில் இறங்கினர். பெண் குழந்தையை பெற்றோரே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications