வேலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்.. மொத்தமாக கலெக்டரை சந்தித்து வைத்த பரபரப்பு கோரிக்கை
வேலூர்: வேலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் மோகன், ரமேஷ், ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமியை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அப்போது 15-வது நிதிக்குழு மானியத்தில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவில் ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரங்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஊராட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி அனுப்புகிறது.அந்த நிதியை பயன்படுத்த காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பஞ்சாயத்து தலைவருக்கு இருக்கிறது. ஊராட்சி மன்ற தலைவர் தான் கிராமங்களில் முதன்மையான செயல் தலைவராக இருக்கிறார்.

அந்த ஊராட்சியில் உள்ள குடிநீர் குழாய்களை பராமரிப்பு செய்வது, கிராமங்களில் குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். இதேபோல் ஊராட்சிகளில் சாலைகள் பராமரிப்பு செய்வது மற்றும் தேவைப்பட்டால் புதிய சாலைகள் அமைப்பது, தெருவிளக்குகள் பராமரிப்பு மற்றும் தேவைப்பட்டால் புதிய தெருவிளக்குகளை போடுவது போன்ற பணிகளை மேற்கொள்கிறார். மேலும் வீடு கட்டுவதற்கான வரை படங்களை அங்கீகாரம் செய்வதற்கு அனுமதி அளிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஊராட்சி முழுவதும் பொது சுகாதாரத்தை பேணிக் காக்கும் பொறுப்பு ஊராட்சி மன்ற தலைவருக்கு தான் உள்ளது. இதுதவிரவும் அரசு ஒப்படைக்கும் திட்டங்களை அவர் நிறைவேற்ற வேண்டும். உதாரணமாக இலவச வீடுகள் கட்டும் திட்டம், நிலம் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு ஏழை எளியோருக்கான திட்டங்களுக்கு பயனாளிகளை அவரே பரிந்துரை செய்வார்.
மேலும் ஊராட்சி விரும்பினால் சமூக காடுகளை தோற்றுவித்து பராமரிப்பு செய்ய முடியும்..மேலும் அவ்வூராட்சி மக்களின் கோரிக்கைகளை அரசு மற்றும் அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பது ஊராட்சி மன்ற தலைவரின் கடமையாகும். மேலும் தொற்று நோய் ஏற்படும் காலத்தில் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் ஊராட்சியில் அவர் தான் எல்லா பணிகளுக்கும் முதன்மையானவர் ஆவார். விஏஓ உடன் இணைந்து அரசின் அனைத்து பணிகளையும் மேற்கொள்வார். தற்போது ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 15-வது நிதிக்குழு மானியத்தில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வேலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் மோகன், ரமேஷ், ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமியை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
இந்த மனு குறித்து வேலூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசு சார்பில் 15-வது நிதி குழு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தில் வரையறுக்கப்பட்ட பணிகள் மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் என பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசின 15-வது நிதி குழு மானியத்தை பொறுத்தவரை குடிநீருக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், சாலை புனரமைத்தல், சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
அப்போது ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை எங்களால் மேற்கொள்ள இயலாது. பல்வேறு அத்தியாவசிய பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்வதாக கலெக்டர் எங்களிடம் தெரிவித்துள்ளார் " என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications