வேலூர் நாசியாவுக்கு 24 வயதுதான் ஆகிறது.. மாமியார், கணவனால் வில்லங்கம்.. சாட்டையை சுழட்டிய கோர்ட்
வேலூர்: கல்வியில் எவ்வளவு மாற்றம் வந்தாலும், தொழில்நுட்பம் எவ்வளவுதான் பெருகினாலும், வரதட்சணை கொடுமை என்பது இந்தியாவில் நீடித்தே வருகிறது. கொடுமைகளின் வடிவங்கள்தான் மாறுகிறதே, தவிர, உயிரை விடும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. வேலூர் பெண்ணும் இப்படித்தான் தற்கொலை செய்து கொண்டார். என்ன நடந்தது?
பஞ்சாப்பை சேர்ந்த கமாண்டோ வீரர், வரதட்சணைக்காக தனது மனைவியை சமீபத்தில் கொன்று விட்டார்.. இந்த கொலை வழக்கில் அவர் குற்றவாளி என்று நிரூபணமாகிவிட்டது.. இதையடுத்து, பஞ்சாப் விசாரணை நீதிமன்றமும் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனையை விதித்தது.

கமாண்டோ வீரர்
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கமாண்டோ வீரர், பஞ்சாப் ஹைகோர்ட்டை அணுகினார். ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பையே ஹைகோர்ட்டும் உறுதி செய்தது. இதன் மூலம், ஹைகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்தும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் தான் ஒரு பிளாக் கேட் கமாண்டோ என்றும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதாகவும் கூறியிருந்தார். இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த அமர்வு தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது..
அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்
ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றியதால் மட்டுமே, அவர் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது, இந்த வழக்கில் அந்த விலக்கு அளிக்க முடியாது, இன்னும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்று தீர்ப்பு கூறி, தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
வரதட்சணை என்பது எந்த ரூபத்திலும் ஏற்க முடிவதில்லை.. எத்தனையோ சட்டங்கள் விதித்தாலும், வரதட்சணை கொடுமைக்கு எதிராக நீதிமன்றங்கள் சாட்டையை சுழட்டி வருகின்றன.. இதோ வேலூரிலும் நேற்றைய தினம் ஒரு பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.
வேலூர் வரதட்சணை
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த தம்பதி இனாயத்துல்லா - தில்ஷாத்பேகம்.. இவர்களது மகன் 33 வயது இம்ரான் என்பவருக்கும் வந்தவாசியை சேர்ந்த 24 வயது நாசியா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.
ஆனால், நாசியாவுக்கு வரதட்சணை கொடுமை இருந்து வந்துள்ளது.. கணவர் இம்ரானும், மாமியார் தில்ஷாத்பேகமும் கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் விரக்தியடைந்த நாசியா, கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிரடி தீர்ப்பு
இதுதொடர்பாக நாசியாவின் பெற்றோர் கொடுத்தபுகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் இம்ரானையும், மாமியார் தில்ஷாத் பேகத்தையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது..
இதன் இறுதிக்கட்ட விசாரணைகளும் முடிந்து நேற்று நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார்.. அதில், நாசியாவின் தற்கொலைக்கு காரணமான கணவன் இம்ரான், மாமியார் தில்ஷாத்பேகம் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் கூடுதல் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்றங்களின் இதுபோன்ற தீர்ப்புகளும், வரதட்சணைக்கு எதிராக காட்டும் கண்டிப்புகளும் பெண்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது என்றாலும், வரதட்சணையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications