வேலூரில் அரசு பஸ்ஸில் மின்னிய 4 சவரன் தங்கம்.. தங்க நகை சேமிப்பு திட்டத்தில் வந்த காசில் இப்படியா?
வேலூர்: ஒரே நாளில் 2 முறை தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. காலையில் ஒரு சவரன் ரூ. 90 ஆயிரத்தை கடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், இன்று மதியம் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை கடந்து, பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.. நாளுக்குநாள் தங்கம் விலை உயர்ந்துவரும் நிலையில், நகை திருட்டுகளும் பெருகி கொண்டிருக்கின்றன.. அதிலும், நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த நகை திருட்டு சம்பவம் பேரதிர்ச்சியை மக்களுக்கு தந்து வருகிறது.
வேலூர் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்த தம்பதி முனிசாமி மணியரசி.. இதில் மணியரசிக்கு 73 வயதாகிறது.. இவர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்துள்ளார்.

இதன் முதிர்வு காலம் முடிந்ததுமே, அதாவது கடந்த 3ம் தேதி மாலை 5 மணிக்கு, அந்த பணத்திற்கு 4 சவரன் தங்க சங்கிலியை வாங்கிக் கொண்டு, அரசு டவுன் பஸ்சில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்..
தங்க நகை சேமிப்பு திட்டம்
விருபாட்சிபுரம் பஸ் ஸ்டாப் வந்ததுமே, பஸ்சிலிருந்து கீழே இறங்கி தன்னுடைய பையை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 4 சவரன் தங்கச் செயின் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்... பஸ் கூட்டமாக இருந்ததால், யாரோ நகை இருப்பதை நோட்டமிட்டு, நெரிசலையும் பயன்படுத்தி நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.. இதுதொடர்பாக மணியரசி பாகாயம் போலீசில் புகார் தரவும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
அதிகாலையில் எரிந்த லைட்
அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியிலும் வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. சித்தாமூர் அடுத்த ஓம்சக்தி நகர் பகுதியில் 62 வயதுடைய ரவி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார்..
இவர் நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து விட்டு, குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே தூக்கியிருக்கிறார்.. அப்போது நேற்று விடிகாலை 5 மணிக்கு, பெட்ரூமில் லைட் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க மோதிரம், தாலி செயின், கம்மல், நெக்லஸ் என மொத்தம் 6.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. உடனே இதுகுறித்து சித்தாமூர் போலீசில் புகார் தரவும், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.
25 சவரன் தங்கம்
நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் கண்ணன் என்ற தனியார் தொழிற்சாலை ஊழியரின் வீட்டிலும் திருடு போயிருக்கிறது.. கண்ணன் தன்னுடைய குடும்பத்தினருடன் கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
நேற்று காலை திரும்பி வந்து பார்த்தால், வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 25 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. கண்ணன் புகாரையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும்நிலையில், நடுத்தர, ஏழை மக்களால் தங்கத்தை நினைத்துகூட பார்க்க முடியாத நிலைமை உள்ளது.,. இதில் பாடுபட்டு சேர்த்து வைத்திருந்த நகையையும், கொள்ளையர்கள் திருடி செல்வது பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications