மதுவிலக்கு பிரிவு போலீசார் 28 பேர் கூண்டோடு இடமாற்றம்.. வேலூர் எஸ்.பி அதிரடி! என்ன பின்னணி?
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 28 போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் மலைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேலூர், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 28 போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ், வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி காவல் ஆய்வாளர் சிவச்சந்திரன் விரிஞ்சிபுரத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், வேலுார் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவியாளர் ஜெகதீசன் உள்பட வேலுார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சேர்ந்த 9 உதவி காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளர்.
மேலும், வேலுார் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்குப் பிரிவில் பணியாற்றிய 28 காவல துறையினர் கூண்டோடு மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வேலூர் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 67 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து, கள்ளச் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications