வேலூர் வழியாக ஏலகிரி சுற்றுலா போன சென்னை மாணவிகள்.. வாழ்க்கையை புரட்டி போட்ட காரில் நடந்த சிறிய தவறு
வேலூர்: சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு வேலூர் வழியாக சுற்றுலா சென்ற சென்னை என்ஜினீயரிங் மாணவ மாணவிகளின் சந்தோஷத்தை மொத்தமாக பறித்துள்ளது கார் டயரில் ஏற்பட்ட ஒரு சிறிய தவறு.. கார் டயர் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும், என்ன நடந்தது என்பதையும் பார்ப்போம்.
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் மாணவர் விஷ்ணு, சென்னை ஆயிரம் விளக்கு மாடல் ஸ்கூல்தெருவை சேர்ந்த 19 வயதாகும் மகள் அஸ்வதி ஆகிய இருவரும் சென்னையை அடுத்த தண்டலம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்கள். இதேபோல் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த டிராவிட் (21). சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த சக்திபிரியா (21) அதே கல்லூரியில் படித்து முடித்தவர்கள் ஆவார்கள்.

இவர்கள் 4 பேரும் கார் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்கள். இதன்படி அவர்கள் நேற்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வேலூர் வழியாக ஏலகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை விஷ்ணு ஓட்டி சென்றுள்ளார். இவர்களின் கார் காலை 9.30 மணியளவில் வேலூரை அடுத்த மோட்டூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது.
அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பை (சென்டர் மீடியன்) தாண்டி மறுபுறம் உள்ள பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குள் பாய்ந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முழுமையாக நொறுங்கியது.
இந்த விபத்தில் விஷ்ணு, அஸ்வதி, டிராவிட், சக்திபிரியா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் வழியிலேயே அஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் டயர் வெடித்தது தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். கார் டயர் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். டயர்களில் அதிகக் காற்றைவிட குறைந்த காற்று இருப்பது தான் டயருக்கு ஆபத்தானது. குறிப்பாக கோடைக்காலங்களில் குறைந்த காற்றழுத்தம் உள்ள டயர்கள், வெப்பம் மற்றும் அழுத்தம் வேகமாக அதிகரிப்பதால், முன்னறிவிப்பின்றி எந்த நேரம் வேண்டுமானாலும்வெடிக்கும்.
நீங்கள் பயணிக்கம் காரில் நான்கு டயர்களில் ஏதேனும் ஒன்றில் காற்றழுத்தம் சரியான அளவில் இல்லையென்றாலும் கூட, காரின் நிலைத்தன்மை பாதிக்கும், சஸ்பென்ஷனிலஅழுத்தத்தை ஏற்படுத்தும். இது வண்டியின் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸை பாதித்து காரை ஓட்டுவதிலும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதிலும் சிக்கல்களை உண்டாக்கும்.
பெரும்பாலான கார்களின் டயர்களில் காற்றழுத்தம் 30 முதல் 35PSI ஆக இருக்க பரிந்துரைக்கிறார்கள். ஆனால்பலர் அறியாமையால் PSI குறியீட்டு அளவை விட அதிகமான காற்றை டயர்களில் நிரப்புவதும் சில நேரங்களில் சிக்கலாக மாறுகிறது. நீண்ட தூரப் பயணத்தின்போது டிரைவர் டீ குடிக்க வண்டியை நிறுத்துவது போல், காருக்கும் டயருக்கும் வெப்பத்தை குறைக்க ஓய்வு தேவை. குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 10 நிமிடங்கள் வண்டிக்கு ஓய்வு தந்தால் டயர் வெப்பமடைவதைக் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள்.
உங்கள் டயர்கள் பார்க்க புதிது போல் இருந்தாலும் அதில் உள்ள பட்டன்கள் தேய்மானம் அடையாமல் இருந்தாலும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்குப் பிறகு டயர்களை மாற்றுவது நல்லது. நீங்கள் காரில் நீண்ட தூரப் பயணங்களுக்கு போக போறீங்க அப்படீன்னா, டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது போல் டயரில் உள்ள வெடிப்புகளையும் சரிப்பார்ப்பது அவசியம் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த வாகன ஓட்டிகள்.டயர்களில் வீக்கம், விரிசல், சேதம் போன்ற ஏதேனும் குறைகளைக் காண நேர்ந்தால் உடனே மாற்றிவிட்டு பயணம் செய்வது நல்லது என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.












Click it and Unblock the Notifications