பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால்.. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. அண்ணாமலை வாக்குறுதி!
வேலூர்: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலை பேசுகையில், காமராஜர் ஆட்சியில் பல அணைகள் கட்டப்பட்டன, அதன் பிறகு வந்த முதலமைச்சர்கள் யாரும் அவரைப் போல் செயல்படவில்லை. அதிமுக, திமுக என மாறி மாறி பங்காளிச் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். சட்டத்துக்கு புறம்பாக கல்குவாரிகளில் கோடிக்கணக்கில் திமுகவினர் சம்பாதித்து உள்ளனர்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கிவிட்டு மக்களை அடிமை போல் நடத்துகின்றனர். ஆனால் 8.5 லட்சம் கோடி ரூபாயை மக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி. ஊழல் இல்லாத அரசாக மத்தியில் 10 ஆண்டு காலம் பாஜக ஆட்சி செய்தது. பாஜகவின் 76 அமைச்சர்களும் நேர்மையானவர்கள்.
அயோத்தியில் ராமர் கோவிலை யாரையும் மிரட்டி கட்டவில்லை. அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து கட்டிய கோவில் தான் ராமர் கோயில். மத்தியில் 10 ஆண்டு காலமாக ஜனநாயகம் திகழ்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் குடும்ப ஆட்சி தழைத்தோங்கி வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குடும்ப ஆட்சியை அடியோடு வெறுக்கிறார். கோபாலபுரத்தில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் உள்ள எம்எல்ஏ, எம்.பி, உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் குடும்ப ஆட்சி செய்கின்றனர்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதன் பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒன்பது தலைமுறையாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது. இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும்.
டாஸ்மாக் கடையை குறைத்து கள்ளுக் கடைகள் திறக்கப்படும். இந்தியாவில் மோடிக்கு எதிராக களம் காண வேட்பாளர் யாரும் இல்லை. பிரதமர் வேட்பாளர் என்றால் இந்தியாவில் மோடி மட்டுமே. 2024 தேர்தலை பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒரே வேட்பாளர் மோடி தான்" என அண்ணாமலை பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications