சென்னையில் தண்ணீர் லாரிகள் கட்டுப்பாடற்று இயக்கப்படுகின்றன - மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் லாரிகள் கட்டுப்பாடற்று இயக்கப்படுவதாக திமுக பொருளாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறி்த்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:
சென்னை கிண்டி அருகில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் மீது தண்ணீர் லாரி மோதி. சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு பெருந்துயரமுற்றேன். அந்த மாணவிகள் சாலையைத் கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, இந்த பயங்கரமான விபத்தை ஏற்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எதிர்காலக் கனவுகளுடன் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவிகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. இப்படியொரு விபத்தில் இளம் வயது மாணவிகளை பறிகொடுத்திருக்கும் பெற்றோரையும், உறவினர்களையும் நிலை குலைய வைத்திருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவிகளின் குடும்பத்திற்கும், சக மாணவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து அவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர்கள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும், அதற்குரிய தரமான சிகிச்சையை அரசே முன் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் லாரிகள் கட்டுப்பாடற்று இயக்கப்படுகின்றன. இது சாலைகளில் நடப்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்ளில் செல்வோர் அனைவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கல்லூரி வளாகத்திற்குள் மாநகர பேருந்துகள் வந்து நிற்காத காரணத்தால் மாணவிகள் வெகு தொலைவில் இறங்கி நடந்து வர வேண்டியிருக்கிறது என்றும், அப்படி நடந்து வரும் சாலை குறுகியதாக இருப்பதால் இது போன்ற விபத்துகள் நேரிடுகிறது என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்களும், செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
"கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பேருந்துகள் வந்து மாணவிகளை இறக்கி விட வேண்டும்" என்று நீண்ட நாட்களாக மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைத்து வருவதாகவும், அக்கோரிக்கையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கண்டு கொள்ளவில்லை என்றும் மாணவிகள் புகார் கூறியிருக்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று விபத்து நிகழ்ந்தவுடன் செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளே மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
சாலைகளில் நடப்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையை கடந்து செல்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக இது போன்று கல்லூரிகள், பள்ளிகள் இருக்கும் இடங்களில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இறங்கி கல்லூரிக்குள்ளும், பள்ளிகளுக்குள்ளும் செல்வதற்கு வசதியாக பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு இருக்கிறது. ஆகவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகர போக்குவரத்து போலீஸாரும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் இணைந்து இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications