தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய கார்.. 3 பேர் பலி.. திண்டிவனம் அருகே சோகம்
விழுப்புரம்: திண்டிவனம் அருகே மயிலம் பகுதியில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதில் அந்த கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சாலையில் நடந்த சென்ற ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்துகொண்டிருந்தது. மயிலம் அருகே வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் தாறுமாறாக சீறி வந்தது.

அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து இந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நடந்து சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்ட போது சாலையில் நடந்து சென்ற ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் என 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பூபாலன், ஐயப்பன் என்பது தெரியவந்தது. விபத்து தொடர்பாக மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications