விழுப்புரம் கலெக்டர் ஆபிஸுக்கு வந்த 'இந்தியன்-2'.. கழிவறையில் இருந்த வாசகம்.. அதிர்ந்த அதிகாரிகள்
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் ஆபிஸில் அரசு அதிகாரிகள் ஏழைகளிடம் லஞ்சம் வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியன் 2 என்ற பெயரில் ஒருவர் வாசகங்களை எழுதி வைத்துள்ளார். இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் ஏழை, எளிய, பாமர மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தருவதற்கு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தேடிச் சென்று அவர்களை வர்மக்கலைகள் மூலம் தீர்த்துக்கட்டும் வேடத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல் பாகம் மிகப்பெரிய மெகா ஹிட் திரைப்படம் ஆகும். அதுபோல் ஒரு திரைப்படத்தை இனி ஷங்கரே எடுக்க முடியுமா என்ற கேள்விகள் உள்ளது.

ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியன் முதல் பாகம் ஏழை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அவர்களின் உணர்வை அப்படி கொண்டு வந்திருக்கும். இந்நிலையில் இந்தியன் 2 இரண்டாம் பாகம் என்பது லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் திருந்தவும், அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இதன் திரைக்கதை இருக்கிறது.
இந்நிலையில் இந்தியன்-2 திரைப்பட பாணியில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாசகம் ஒட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு செல்கின்றனர். அப்படித்தான் திங்கள்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ஒருவர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையின் கதவுக்கு பின்னால் இந்தியன்-2 திரைப்பட பாணியில் ஒரு வாசகத்தை எழுதி வைத்து சென்றிருக்கிறார்..

அதில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் ஏழை, எளிய, பாமர மக்களின் குறைகளை பூர்த்தி செய்யுங்கள். ஏழை, எளிய மக்களின் கோரிக்கை மனுவை வாங்கி அவர்களுக்கு உதவி செய்யுங்கள். லஞ்சம் வாங்காமல் பணியை செய்யுங்கள் என்று தமிழிலும், இந்தியன்-2 என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தனது கோரிக்கை நிறைவேறாத யாரோ ஒருவர், ஆத்திரத்தில், அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற வாசகத்தை எழுதி, கழிவறையின் கதவில் ஒட்டிவிட்டு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனை எழுதியவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் கலெக்டர் ஆபிஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications