விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாதக வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. யார் இந்த அபிநயா? மீண்டும் சீட்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு ஜூன் 10-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை தேர்தல் ஜூலை 10-ல் நடைபெறும் நிலையில் இன்று முதல் (ஜூன் 14) வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயரை சீமான் வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகின்ற ஜூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாதக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார் அபிநயா. 65,381 வாக்குகள் பெற்று நான்காவது இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களிலேயே மீண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் அபிநயா. அபிநயா ஹோமியோபதி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications