நான் வாரிசு அரசியலில் வந்தேனா..? கோபத்தின் உச்சிக்கே போன சி.வி.சண்முகம்! பொன்முடிக்கு காட்டமான பதில்
விழுப்புரம்: வாரிசு அரசியல் மூலம் வந்தவர் அதிமுகவின் சிவி சண்முகம் என்று அமைச்சர் பொன்முடி விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் பொன்முடி ஒரு டம்மி பீஸ் என்றும், அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என்று அதிமுக ராஜ்ய சபா எம்பி சிவி சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் தன் தந்தை 1996ம் ஆண்டே மறைந்துவிட்டதாகவும், 2001ம் ஆண்டில் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்தார். உதயநிதி ஸ்டாலின் என் கால் தூசுக்கு சமம் என்று சிவி சண்முகம் பேசியது திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடியாக அமைச்சர் பொன்முடி, அதிமுகவின் சிவி சண்முகமே வாரிசு அரசியல் மூலம் வந்தவர் தான் என்றும், உதயநிதி பற்றி பேசுவதற்கு சிவி சண்முகத்திற்கு தகுதியில்லை என்று விமர்சித்தார். இதனால் பொன்முடி - சிவி சண்முகம் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை
இந்த நிலையில் விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் ராஜ்ய சபா உறுப்பினர் சிவி சண்முகம் செய்தியாளரை சந்தித்தார். அப்போது சிவி சண்முகம் கூறுகையில், தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுடைய வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்களுக்கு எதிராக சில அதிமுக நிர்வாகிகளை மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.

முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
தொடர்ந்து வாரிசு அரசியல் பற்றிய கேள்விக்கு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் யாரையும் அடுத்த வாரிசு என்று கைகாட்டவில்லை. ஜனநாயக முறையில் அதிமுகவில் உள்ள உண்மை தொண்டர்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுத்தனர். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறது. கட்சியின் தலைவராக கருணாநிதிக்கு பின், அன்பழகன் மற்றும் வீராசாமி உள்ளிட்டவருக்கு தகுதி இல்லையா? அவர்களை போல் பலர் இருக்கின்றனர்.

பொன்முடி பற்றி சிவி சண்முகம்
ஆனால் முக ஸ்டாலினுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். இதுதான் வாரிசு அரசியல். அமைச்சர் பொன்முடிக்கு என்னைப் பற்றி பேசவில்லை என்றால் அவரைக் கட்சியிலிருந்து தூக்கி விடுவார் என்ற அச்சம் உள்ளது. அதனால் என்னைப் பற்றி அவர் பேசி வருகிறார். அமைச்சர் பொன்முடி ஒரு டம்மி பீஸ். அதனால் அவரைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பற்றி பேசுவதற்கு பொன்முடிக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை.

வாரிசு அரசியல் வரிசை
என் தந்தை மூலமாக நான் அரசியலில் முன்னேறியதாக பொன்முடி பேசுகிறார். என் தந்தை 1996ம் ஆண்டு மறைந்துவிட்டார். அப்போது நான் எம்எல்ஏ அல்லது கவுன்சிலரோ அல்ல. மாவட்ட இளைஞரணியில் ஒரு பிரதிநிதி. அதன் பின்னர், 2001ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். அதன் பின்னர் அமைச்சர், தொடர்ந்து மாவட்டச் செயலாளர் என்று வளர்ந்தேன் என்று பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications