இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு.. சர்ச்சையான காட்சிக்கு பிறகு வெளியான முழு அறிக்கை!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இசைஞானி இளையராஜாவை கலாய்க்கும் வசனம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. இதையடுத்து தற்போது படக்குழுவே அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.

இளையராஜாவின் பாடல் காட்சி
கருப்பு திரைப்படத்தில் ஒரு போராட்டக் காட்சியின்போது, இளையராஜாவின் பாடல் ஒலிப்பது போல ஒரு காட்சி இருக்கிறது, அந்த சமயத்தில் ஆர்.ஜே. பாலாஜி கதாபாத்திரம், "இந்த பாடலை நீங்கள் பயன்படுத்துகிறீர்களே.. இளையராஜா கிட்ட காப்பிரைட் வாங்கிட்டீங்களா? இல்லையென்றால் கேஸ் போட்டுருவாரு" என்று பேசுவது போன்ற வசனம் இருந்ததாக ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த காட்சியை பார்த்த இளையராஜா ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். ஏற்கனவே தனது இசைப் படைப்புகளின் காப்புரிமை குறித்து உறுதியாக இருந்து வரும் இளையராஜாவை கலாய்க்கும் விதமாக இந்த வசனம் அமைந்திருக்கிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
"இது தேவையில்லாத வசனம்", "இசைஞானியை ஏன் இப்படி டார்கெட் பண்ண வேண்டும்?", "ஒரு லெஜெண்டை கலாய்க்க வேண்டிய அவசியம் என்ன?" என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளது.
படக்குழு வெளியிட்ட அறிக்கை
அந்த அறிக்கையில், "மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, 'கருப்பு' திரைப்படத்தில் தங்கள் பெயரை பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு திரைப்பட நிகழ்வு.
50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.
உள்நோக்கம் எதுவுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களது சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்."
இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் இந்த காட்சியை சாதாரண சினிமா வசனமாக எடுத்துக் கொண்டவர்களும், சர்ச்சை பெரிதாகிய பிறகு படக்குழு உடனடியாக விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டது சரியான முடிவு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம், இளையராஜா ரசிகர்கள் சிலர் "எதிர்ப்பு வந்த பிறகுதான் மன்னிப்பு கேட்கிறீர்களா?", "அந்த வசனம் முதலில் எப்படி ஒப்புதல் பெற்றது?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு பக்கம் கருப்பு திரைப்படம் வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இப்படியான சர்ச்சைகளும் படத்தை சுற்றி பேசுபொருளாக மாறி வருகின்றன. தற்போது இந்த விவகாரத்தில் இளையராஜா தரப்பிலிருந்து ஏதேனும் பதில் வருமா என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications