பொன்முடிக்கு ஷாக் கொடுத்த சிவி சண்முகம்.. திடீரென மயிலம் தொகுதிக்கு செல்வது ஏன்? திமுகவின் ஆட்டம்!
விழுப்புரம்: அதிமுக மாநிலங்களவை எம்பி சிவி சண்முகம், வரும் சட்டசபைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். அமைச்சர் பொன்முடியை அந்த தொகுதியில் இருந்து ஓடவிட்ட சிவி சண்முகம், ஒரேயொரு தேர்தலில் அடைந்த தோல்வியால் தொகுதி மாறுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுதொடர்பாக பார்க்கலாம்.
1989, 1996, 2001, 2006 என்று விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற்று திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக மாறியவர் பொன்முடி. இந்த வெற்றியே திமுகவில் பொன்முடி உச்சத்திற்கு செல்லவும், விழுப்புரம் மாவட்டம் அவரது கட்டுப்பாட்டுக்குள் செல்லவும் காரணமாக அமைந்தது. இப்படியான சூழலில் 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தரப்பில் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் களமிறங்கினார்.

இந்த தேர்தலில் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடி தோல்வி அடைய, சிவி சண்முகம் திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தார். இதன்பின் 2016 சட்டசபைத் தேர்தலில் சிவி சண்முகம் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட, பொன்முடி திருக்கோவிலூர் தொகுதிக்கு சென்றார். இதனால் விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகத்தை வீழ்த்த முடியாமல் திமுக திணறியது.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் ராஜ்ய சபா எம்பியாக இருந்தவர் லட்சுமணன். சசிகலா ஆதரவுடன் அதிமுகவில் அடுத்தடுத்து பொறுப்புகளுக்கு சென்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தார். இதன்பின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்த பின், லட்சுமணனின் பதவிகள் அடுத்தடுத்து சிவி சண்முகம் வசம் சென்றது.
இதனை புரிந்து கொண்ட லட்சுமணன், உடனடியாக திமுக பக்கம் தாவினார். உடனடியாக அவருக்கு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியான வாய்ப்பாக கருதிய லட்சுமணன், விழுப்புரம் தொகுதியில் சுற்றி சுழன்று பணியாற்றினார். இதன் விளைவாக பொன்முடியால் வீழ்த்த முடியாத சிவி சண்முகத்தை, லட்சுமணன் வீழ்த்தி காட்டினார்.
இதனால் மீண்டும் விழுப்புரம் தொகுதி திமுக வசமானது. அதுமட்டுமல்லாமல் லட்சுமணனின் பணியால் உற்சாகம் அடைந்த திமுக தலைமை, அவருக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்கியது. இதனை பயன்படுத்தி லட்சுமணன் விழுப்புரம் தொகுஹியில் அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் பலரையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.
ராஜ்ய சபாவிற்கு சிவி சண்முகம் சென்றதால், விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகம் செல்வாக்கு குறைய தொடங்கியது. இப்படியான சூழலில் தனது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் இருக்கும் மயிலம் தொகுதியில் போட்டியிட சிவி சண்முகம் விருப்ப மனு கொடுத்துள்ளார். தனது அண்ணன் மூலமாக இந்த மனுவை கொடுத்திருக்கிறார்.
இதனால் சிவி சண்முகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற அதிமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். கடந்த முறை மயிலம் தொகுதி பாமக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இம்முறை சிவி சண்முகம் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதனால் அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏ-வான சிவகுமார் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார்.












Click it and Unblock the Notifications