துர்கா காலில் மெட்டி.. தாய் பேச்சு கேட்காத பிள்ளை உதயநிதி.. சொல்வது மன்னார்குடி ஜீயர்
விழுப்புரம்: அமைச்சர் உதயநிதி சனாதனம் பேசிய நிலையில் அவரது தாயார் துர்கா சனாதன தர்மத்தின் வழிகாட்டியாக நெற்றியில் பொட்டு காலில் மெட்டி அணிந்து உள்ளார் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேடையில் பேசும் போது டெங்கு, கொரோனா, போன்று சனாதனத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறினார். உதயநிதியின் சனாதன கருத்து இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது வெறுப்பு பிரச்சாரம், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது என அவருக்கு எதிராக கொந்தளித்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பேசிய பலரும் உதயநிதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தே பேசினர். அதே நேரத்தில் உதயநிதி பேசியதில் தவறேதும் இல்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் பேசிய மன்னார்குடி ஜீயர், அரசு என்பது சாதி, மதங்களைக் கடந்து பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றார். அரசாங்கம் என்பது அரசாங்கமாக இருக்க வேண்டும். சாதி, மதம் பார்ப்பதாக இருக்கக்கூடாது. உதயநிதிக்கு தைரியம் இருந்தால் சர்ச், மசூதிக்குள் சென்று உங்களுடைய தர்மத்தின் இருக்கக்கூடிய தவறை சரி செய்யுங்கள் என்று சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இந்து மதத்திற்கும், இந்துகளுக்கும் விரோதமானவர்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. சனாதன தர்மம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை நிர்ணயித்து வடமாநில சாமியார் பேசியதில் தவறில்லை என்றும் சனாதன தர்மம் என்பது எங்கள் தாய்க்கு இணையானது எனவும் தெரிவித்தார்.
சனாதனம் என்பது பழமையை குறிப்பது அதன் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனக் கூறிய மன்னார்குடி ஜீயர், ஆ.ராசாவை திமுக எதற்காக தனித் தொகுதியில் நிறுத்தியது என்றும் அவரை பொதுத்தொகுதியில் போட்டியிட வைத்திருக்கலாமே எனக் கேட்டார். மன்னார்குடி ஜீயரின் பேச்சு பரபரப்பை பற்ற வைத்தது.
இன்றைய தினம் விழுப்புரத்தில் மன்னார்குடி ஜீயர் பேசியபோது துர்கா ஸ்டாலின் சனாதனத்தை கடைபிடிப்பதாக கூறினார். அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுகிறார். அவரது தாயார் துர்கா ஸ்டாலின் நெற்றியில் பொட்டு வைத்து காலில் மெட்டி அணிந்து சனாதனத்தை கடைபிடிக்கிறார். தாய் பேச்சு கேட்காத அமைச்சர் உதயநிதியை அனைவரும் சேர்ந்து திருத்த வேண்டும் என்றும் மன்னார்குடி ஜீயர் கூறியுள்ளார்.
சனாதனம் பற்றி அரசியல்வாதிகள் பலரும் அவர்களின் சுய லாபத்திற்காகப் பேசுகின்றனர். சனாதனம் பற்றி பேசுவோர் அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் சனாதனத்தை விட்டு வெளியே வராமல் இருப்பதை கவனிக்க வேண்டும் என்றும் மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications