திடீர் திருப்பம்.. பிடிவாரண்ட் உத்தரவால் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜர்.. நீதிபதியின் அதிரடி
முன்னாள் டிஜிபி இன்று விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்
விழுப்புரம் : பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் சிறப்பு டிஜிபி இன்று நேரில் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் உதவியாக இருந்ததாக கூறி, அவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

தள்ளுபடி
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் தொடர்ந்து இருந்து வருகிறது... தன் மீதான வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் விசாரிக்க தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை அடுத்த 3 மாதங்களில் முடிக்கவும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டிருந்தது.

பிடிவாரண்ட்
இதையடுத்து, 2 தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை..கண்ணன் மட்டும் ஆஜராகியிருந்தார்... எனவே, முன்னாள் டிஜிபி ஆஜராவதற்கு கடும் கண்டனத்தை கோர்ட் தெரிவித்திருந்தது.. மேலும், 15 நாள் அவகாசம் கேட்டு முன்னாள் டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தள்ளிவைப்பு
இதையடுத்து நவம்பர் 1ம் தேதிக்கு அதாவது இன்றைய தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் முன்னாள் டிஜிபி கண்டிப்பாக ஆஜராக வேண்டும், அவ்வாறு அன்றைய தினம் அவர் ஆஜராகாத பட்சத்தில் அவருக்குப் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்... இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார்.. அதேபோல கண்ணனும் ஆஜரானார்.

ஆதாரங்கள்
அப்போது, பெண் எஸ்பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் பார்க்கும்படியும், படிக்கும் படியாக தெளிவாக இல்லை, அதனை தெளிவாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சிசிடிவி கண்காணிப்பு காட்சிப் பதிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் டிஜிபி தரப்பில் கோரப்பட்டது. மேலும், சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை, ஒருதலைப்பட்சமான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டனர் என்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வாதாடியது.

ஒத்திவைப்பு
ஆனால், அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது... இதையடுத்து முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கேட்ட ஆவணங்களை நாளைக்குள் பென்டிரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டுள்ளார்.. அத்துடன் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைத்தார்... ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று முன்னாள் டிஜிபி நேரில் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications