"உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள்! தமிழ்நாடே அவர் பின்னால் இருக்கு.." கவுதம சிகாமணி எம்பி ஒரே போடு
விழுப்புரம்: உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கள்ளக்குறிச்சி எம்பியும் அமைச்சர் பொன்முடி மகனுமான பொன்.கௌதமசிகாமணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏவும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் கடந்த நவ. 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
அப்போது தமிழ்நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் திமுக சார்பில் நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக இப்போது வரை பல நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
உதயநிதி பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்ட பள்ளி மாணவர்களுக்கு நிர்பந்தம்.. பாஜக நாராயணன் குற்றச்சாட்டு

உதயநிதி பிறந்த நாள்
கட்சி சார்பில் ஒரு பக்கம் நிகழ்ச்சிகள் என்றால் ரசிகர் மன்றங்களும் தொடர்ச்சியாகப் பல நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தின. அதன்படி விழுப்புரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் திமுக கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் 1008 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி விழுப்புரம் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ஏ.சி.கே.பிரேம் தலைமையில் நடைபெற்றது.

கவுதம சிகாமணி
திமுக மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி எம்பியும் அமைச்சர் பொன்முடி மகனுமான டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணி, "உதயநிதி ஸ்டாலின் வருகைக்குப் பின் திமுக இளைஞரணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. அவரது செயல்பாடுகள் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.

துணை முதல்வர்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக ஆவார்.. அப்போது தான் தமிழகம் முழுக்க அவரது பணிகளால் பலனடையும். இந்த தமிழக மக்களே அவரது பின்னால் இருக்கும். வரும் அனைத்து தேர்தல்களிலும் உதயநிதி திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியை நிச்சயம் பெற்றுத் தருவார். உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் சார்பாகவும் இந்த கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் முன்வைக்கிறோம்" என்றார்.

ஒரே போடு
சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதியை அமைச்சராக வேண்டும் என்று பல்வேறு மூத்த அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கௌதமசிகாமணி ஒரு படி மேலே சென்று உதயநிதியைத் துணை முதல்வராக வேண்டும் என்றே சொல்லிவிட்டார். அப்போது தான் சேப்பாக்கம் தொகுதிக்கு மட்டுமில்லாமல்.. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் உதயநிதியால் பலன் கிடைக்கும் என்பது கௌதமசிகாமணியின் கோரிக்கையாக உள்ளது.

மூத்த அமைச்சர்கள்
கவுதம சிகாமணி மட்டுமின்றி, பல மூத்த அமைச்சர்களும் கூட உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அமைச்சர்கள் கே. என் நேரு, மா சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரும் இந்த விருப்பத்தைத் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இப்படி உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியது. அப்போது செயல்படாதா அமைச்சர்களை நீக்கிவிட்டு, இளம் அமைச்சர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், அமைச்சரவையே மாற்றியமைக்கப்படும் என்றே சொல்லாம் சொல்லப்பட்டது.

உதயநிதி
இருப்பினும், அப்படி எந்தவொரு அமைச்சரவை மாற்றமும் நடக்கவில்லை. இத்கிடையே இப்போது மீண்டும் அதே பேச்சு எழுந்துள்ளது. இருப்பினும், உதயநிதி இந்த விவகாரத்தில் ஓப்பனகா எதுவுமே சொல்வதில்லை. எந்தவொரு விஷயத்திலும் தக்க நேரத்தில் முதல்வர் சரியான முடிவை எடுப்பார் எனக் கூறிவிட்டு சைலண்டில் மோடில் உள்ளார் உதயநிதி! இந்தச் சூழலில் உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் எனக் கௌதம சிகாமணி பேசிய பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.