யாருக்கு சார் இந்த மனசு வரும்! சொத்தை அரசுக்கு எழுதிக்கொடுத்த அமைச்சர் மஸ்தான்! மதிப்பு எவ்வளவு?
விழுப்புரம்: வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தனக்கு சொந்தமான 66 செண்ட் நிலத்தை மலைவாழ் மக்களுக்காக தானமாக வழங்கியிருக்கிறார்.
இதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய் என்கிற போதும் அதைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் சொந்த நிலத்தை அரசுக்கு வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் மஸ்தான்.
செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் சென்ற அமைச்சர் மஸ்தான், முறைப்படி பத்திரப்பதிவு நடைமுறையை பின்பற்றி நிலத்தை அரசுக்கு மாற்றிக்கொடுத்தார்.

சிறுபான்மையினர் நலன்
தமிழக அமைச்சரவையில் வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். கால் நூற்றாண்டு காலம் செஞ்சி பேரூராட்சி தலைவராக இருந்த இவர், 2 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்று இப்போது அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தனர்.

சொந்த நிலம்
அந்த மனுவை பரிசீலித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கும் பணிகளை தொடங்கியிருக்கிறார். ஆனால் அங்கு அரசு நிலமோ, புறம்போக்கு நிலமோ இல்லை என்பதால், இது தொடர்பான தகவலை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றிருக்கிறார். இதையடுத்து சிறிதும் யோசிக்காமல் எனது சொத்தை தருகிறேன் அவர்களுக்கு பிரித்துக் கொடுங்கள் எனக் கூறி மாவட்ட நிர்வாகத்தை திகைக்க வைத்திருக்கிறார் அமைச்சர் மஸ்தான்.

அரசுக்கு தானம்
மேலும், முதலமைச்சரிடம் எந்த நம்பிக்கையோடு மலைவாழ் மக்கள் மனு கொடுத்தார்களோ, அந்த நம்பிக்கை இம்மியளவு கூட பிசகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அமைச்சர் மஸ்தான், தனது சொத்தை மலைவாழ் மக்களுக்கு உடனடியாக எழுதிக் கொடுக்க முன் வந்தார். அமைச்சர் மஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு அவரது குடும்பத்தினர் பக்கபலமாக நின்று ஆதரவு வழங்கியதுடன், செஞ்ச வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று அமைச்சரின் மனைவி சைதானி பீவி, மூத்த மகள் ஆகியோர் முறைப்படி கையெழுத்திட்டு கொடுத்து அரசுக்கு சொத்தை வழங்கினர்.

60 லட்சம் ரூபாய்
அமைச்சர் மஸ்தான் அரசுக்கு தானமாக வழங்கிய 66 செண்ட் நிலத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் இப்படியொரு அமைச்சரா என அரசியலை கடந்து பொதுமக்கள் மத்தியிலும் அமைச்சர் மஸ்தானுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதனிடையே அமைச்சர் மஸ்தானின் இந்த மனிதநேய செயலை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவரை பாராட்டியிருக்கிறார்.

இன்று பிறந்தநாள்
இதனிடையே அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரை கட்சி கடந்து செஞ்சி சுற்றுவட்டார பொதுமக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பொதுவாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் அவர் இறவா புகழை சேர்த்து வைப்பதே மிகப்பெரிய சொத்து என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications