கடும் வறட்சி... மழை வேண்டி திண்டிவனத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள குபா ஈத்கா பள்ளி வாசலில் மழை வேண்டி 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
நடப்பாண்டில் சரியான மழை இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன.
பல கிராமங்களில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலையில் உள்ளனர்.

மழை வேண்டி யாகம்
இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.

கடும் வறட்சி
இதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு தொழுகை
இதனிடையே, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஜமாஅத் உலமா சார்பில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மைதானத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். அப்போது நல்ல மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் அனைவரும் நலமாக வாழவும் வேண்டி சிறப்புத் தொழுகையில் பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ஏராளமானோர் பங்கேற்பு
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைந்துள்ள வாரச் சந்தை திடலில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த இமாம் ஹஜ்ரத் இக்பால் சிறப்பு தொழுகையை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜமாத்தார்களும் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்புத் தொழுகையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
