அதிமுக கூட்டணியில் நாதக, பாமக! 2026ல் ஆட்சி மாறுமா? அப்ப விஜய் எந்த பக்கம்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் பாமகவுக்கு உதவும் வகையில் அதிமுக மறைமுகமாக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி என்றால் 2026இல் பாமகவும் பாஜகவும் அதிமுக கூட்டணிக்குள் வருமா? அரசியல் கணக்கு என்ன?

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள்தான் உள்ளது. ஆளும் கட்சி தன்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் செலவழித்து களத்தில் வேலை செய்து வருகிறது. இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சிக்குதான் வெற்றியை தேடித்தரும் என்பது பரவலான நம்பிக்கை. விதிவிலக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேறு மாதிரியான முடிவை கொடுத்துள்ளது. இருந்தாலும் அதிகப்பட்சமாக ஆளும் கட்சிக்கே அது சாதகமாக போய் முடிகிறது.

Vikravandi By Election 2024 vikravandi bypoll 2024

இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அதிமுக உறுதியாக நம்பியதால்தான் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இந்த சைக்கிள் கேப்பில் நாம் இரண்டாவது இடத்தைப் பிடித்தால், கட்சியின் பலத்தை நிரூபித்து 2026இல் கூட்டணிக் களத்தில் ஒரு சக்தியாக தன்னை முன்வைக்கலாம் என்ற நம்பிக்கையில் பாமக களம் கண்டுள்ளது.

விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பாமகவுக்கு பலம் அதிகம். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது இக்கட்சி இந்தப் பகுதிகளில் செல்வாக்குடன்தான் உள்ளது. ஆனால், நாதக அப்படி அல்ல. அந்தக் கட்சிக்கு இங்கே சில ஆயிரம் வாக்குகள் கிடைத்தாலே அது அபூர்வம். அதிமுக புறக்கணிப்பு நாதகவுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையில் சீமான் களத்தில் குதித்துள்ளார்.

இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் 2026க்கு அடித்தளம் போட்டுக் கொடுக்குமா? ஆட்சி மாற்றத்திற்கு வழி ஏற்படுமா? என்பது பற்றி ரவீந்திரன் துரைசாமி, “இன்றைய நிலையில் ஸ்டாலின் பலம் வாய்ந்த தலைவராக இருந்து வருகிறார். எப்படி 1952 மற்றும் 1967 களில் காமராஜர் வலிமையான தலைவராக இருந்தாரோ அந்தளவுக்கு வலிமையாக இருக்கிறார் ஸ்டாலின். ஆனால், அவர் ஒன்றும் தோற்கடிக்க முடியாத தலைவர் அல்ல. ஏற்கெனவே ஆர்.கே.நகரில் தோல்வியை சந்தித்தவர்தான். அதன் மூலம் பாடம் கற்ற அவர், இப்போது கடந்த 2019, 2021, 2024 ஆகிய மூன்று தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை தனது கட்சிக்குப் பெற்று தந்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் பெற முடியாத வெற்றியைப் பெற்றுள்ளார்.

அவரை தோற்கடிக்க வேண்டும் என்றால், 23% அதிமுக, 18% பலம் கொண்ட பாஜக, 8% பலம் கொண்ட நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றும் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் திமுக கூட்டணியை 2026இல் தோற்கடிக்க முடியும். இதில் பாமக சேருமா என்பது சந்தேகம்தான். அதுவும் சேர்ந்தால் இன்னும் பலம் கூடும். ஆனால், டாக்டர் ராமதாஸ் இக்கூட்டணியில் இணைவதற்கு தயாராக இருக்க மாட்டார். நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்து நின்றதால்தான் இன்றைக்கு 8% க்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

சொல்லப் போனால் 2019 மக்களவைத் தேர்தலில் சீமானைவிட பெரிய சக்தியாக இருந்தவர் கமல்ஹாசனும் டிடிவி தினகரனும்தான். நாங்குநேரியையும் விக்கிரவாண்டியையும் இவர்கள் இருவரும் புறக்கணித்ததன் பலனாக நாதக இன்று 8% அளவுக்கு வளர்ந்துவிட்டது. எனவே சீமான், வருகின்ற 2026 தேர்தலில் தனித்து நிற்பது நல்லது அல்ல. அவர் அதிமுக கூட்டணி பக்கம் வந்தால் மட்டுமே திமுகவையும் ஸ்டாலினையும் தோற்கடிக்க முடியும்” என்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு என்பது 2026 தேர்தலுக்கான முன்னோட்டமா? என்ற கேள்விக்கு பத்திரிகையாளர் கார்த்திகேயன், “இந்த மாதிரியான இடைத்தேர்தல் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு சில நேரங்களில் அது நடந்துள்ளது.

2019இல் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அன்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 9 தொகுதிகளில்தான் வென்றது. இது ஒரு அரசியல் மாற்றத்தை முன்கூட்டியே சுட்டிக் காட்டிய இடைத்தேர்தல் என எடுத்து கொள்ளலாம். ஆனால், ஒரே ஒரு தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தல் என்பது பெரிய மாற்றத்தை பிரதிபலிக்காது.

இந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதே ஒரு கூட்டணிக்கான கணக்குத்தான் என்றே சொல்லப்படுகிறது. இதன் மூலமாக பாமக பலமாக உள்ள தொகுதியை அதிமுக விட்டுக் கொடுத்துள்ளது. அதன் மூலம் மறைமுக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக போட்டியிட்டால் பாமகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு போட்டி வரும். அதை அதிமுக தவிர்க்க பார்த்துள்ளது. பென்னாகரம் போல் ஒரு பின்னடைவை மீண்டும் சந்திக்க வேண்டாம் என அதிமுக நினைக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்து போட்டியிடுவதால் ஒரு நன்மையும் வரப் போவதில்லை. பாமக 2026இல் அதிமுகவை சேர்த்து கொண்டால் மட்டுமே சில தொகுதிகளைப் பெற முடியும். அது பாமகவுக்கு நன்மை தரும்.

அதை மனதில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமி பாமகவுக்கு ஒரு நெருடலை தரவேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டுள்ளார். அவர் 2026இல் பாமக தங்கள் பக்கம் வர வேண்டும் என விரும்புகிறார். அவர் தேமுதிகவை நம்பி களம் கண்டால் அது ஆபத்தில்தான் போய் முடியும். பாமக கடந்த 30 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டு 5% வாக்குகளை தன் கையில் நிலையாக வைத்துள்ளது.

அப்படிப் பார்த்தால் பாஜகவை பாமக தூக்கி சுமக்கிறதா? அல்லது பாமகவை பாஜக தூக்கி சுமக்கிறதா? என்பதே ஒரு கேள்விக் குறியாக உள்ளது. பாமக அதிமுகவுடன் இணைவதுதான் இயற்கையான கூட்டணி. அதன் மூலம்தான் அக்கட்சி அதிக எம்.எல்.ஏக்களைப் பெற முடியும்” என்கிறார்.

ஆனால், சீமானின் தேர்வில் அதிமுக அதிகம் இருப்பதாக தெரியவில்லை. அவர் விஜய்யை அதிகம் நம்புகிறார். விஜய்யின் தாக்கம் 2026இல் எப்படி இருக்கும் என்பதை இன்னும் கணிக்க முடியவில்லை. அதற்கு காரணம், அவர் இதுவரை தேர்தல் களத்தில் போட்டியிடவே இல்லை.

ஆகவே அவரது ட்ராக் ரெக்கார்ட் என்பது ஊகிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அப்படிப் பார்த்தால் 2026இல் அதிமுக ஒரு பெரும் சக்தியாக இருக்குமா? அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கும் அளவுக்கு இருப்பாரா என்பது எல்லாம் மில்லியன் டாலர் கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+