குறுக்க இந்த ‘கரும்பு விவசாயி’ வந்தா? விக்கிரவாண்டியில் நாதகவுக்கு சிக்கல்.. தம்பிகள் பரபர புகார்..!
விழுப்புரம்: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியான நாம் தமிழர் கட்சியை தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சி என வகைப்படுத்தி இருப்பதோடு, மைக் சின்னத்திற்கு அருகே மாம்பழம் சின்னத்திற்கு அடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை வேறு வேட்பாளருக்கு ஒதுக்கியிருப்பது திட்டமிட்ட சதி என நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது.
இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாக அங்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
இதனையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் தலைவர்கள் அங்கு களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தங்கள் கட்சியை வேண்டுமென்றே இருட்டடிப்பு வேலைகள் செய்து இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதாவது தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் பெயர் விபரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் என்ற வகையில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவாவின் பெயர் முதல் பெயராக பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அதற்குப் பிறகாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் என்ற பிரிவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அபிநயா முதலிடத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி.அன்புமணி இரண்டாம் இடத்திலும் இருக்கிறார். அதற்கு பிறகாக மூன்றாம் இடத்தில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேஷ்-க்கு மூன்றாவது இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினருக்கு விவசாயி சின்னத்திற்கு பதிலாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருந்த போதும் சமூக வலைதள பிரச்சாரங்கள் மூலமாக நாம் தமிழர் கட்சியினர் இழந்த செல்வாக்கை மீட்டதோடு சுமார் 30 லட்சம் வாக்குகளை தமிழகம் முழுவதும் பெற்றனர். அதே நேரத்தில் விவசாயி சின்னத்திற்கும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி 8.11 சதவீத வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சி என்று தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பது திட்டமிட்ட சதி என நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் வேட்பாளர் அபிநயாவின் பெயருக்கு பிறகாக அன்புமணி பெயர் இருக்கும் நிலையில் மூன்றாவதாக விவசாயி சின்னத்தை வைத்திருப்பது வாக்காளர்களை திட்டமிட்டு குழப்பம் செயல் எனவும் இது ஆளும் அரசுக்கு தேர்தல் ஆணையம் துணை போவது போல் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications