சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் பெ சண்முகம்.. யார் இவர்? முழு பின்னணி
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம் கட்சியின் புதிய செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் பெ.சண்முகம் யார்? என்பது பற்றியும், கட்சியில் அவர் கடந்து வந்த பாதை குறித்த விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
கே பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலச் செயலர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கே பாலகிருஷ்ணன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 72 வயது ஆனவர்களுக்கு செயலாளர் பதவி கொடுக்கப்படாது என்றும், ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற விதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளது.

இதனால் கே பாலகிருஷ்ணன் ஏற்கனவே இரண்டு முறை பதவி வகித்து உள்ளதாலும், அவருக்கு தற்போது 71 வயது ஆகிவிட்டதாலும் இந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ சண்முகம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் 24 வது மாநில மாநாடு கடந்த 2 நாட்களாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மாநில செயலாளராக ஒருமனதாக பெ சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 81 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த பெ சண்முகம்?
பெ சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இதேபோன்று மலைவாழ் மக்கள் தலைவராகவும் பதவி வகித்து இருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பு, விவசாய சங்க மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவரும் இவர் தான். கடந்த ஆண்டு தமிழக அரசு பெ சண்முகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.












Click it and Unblock the Notifications