1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் காலத்து கொற்றவை, விஷ்ணு சிலைகள் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் விழுக்கம் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை மற்றும் விஷ்ணு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் வெடாலை சேர்ந்த விஜயன், குணசேகரன் ஆகியோர் வல்லம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது , விழுக்கம் கிராமத்தில் வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக விஜயகுமார் தெரிவித்த தகவலின் பெயரில் அவ்வூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Pallava dynastys Lord Kotravai and Vishnu statues found in Villupuram district

விழுக்கம் கிராமத்தின் மேற்கே வயல்வெளியின் மத்தியில் சுமார் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது.

அழகான கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் புண் சிரிப்புடன் தடித்த உதடுகளும் இரு செவிகளும் கழுத்து வரை நீள குண்டலங்கள் ஏதும் இல்லாமல் அழகுறக் காட்சி தருகிறார். கழுத்தில் சரப்பளியுடன் கூர்மையான ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.

எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் பிரயோக சக்கரம் ஏந்தியும் ஏனைய வலது கரங்கள் முறையே போர் வாள் , மான் கொம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் வளைந்த கைபிடியுடன் கூடிய மணியைப் பிடித்திருக்க , மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே வில், கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

Pallava dynastys Lord Kotravai and Vishnu statues found in Villupuram district

வழக்கமாகக் கொற்றவையின் இடையருகே இருபுறமும் காட்டப்படும் வீரர்கள் இச்சிற்பத்தில் காட்டப்படவில்லை எனினும் இடதுபுறம் கலைமான் காட்டப்பட்டுள்ளது. எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறது. இக்கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள் , ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இதன் காலம் கி.பி 7 ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும் இச்சிற்பத்தில் இருந்து தெற்குப்புறமாக 200 மீட்டர் தொலைவில் வயல்வெளிகளின் நடுவில் புதர் ஒன்று காணப்பட்டது. அவ்வூர் மக்களை விசாரித்த பொழுது அப்புதருக்குள் இதுபோல பலகை கல்லினால் செய்யப்பட்ட காளி சிலை ஒன்று சாய்ந்து கிடப்பதாகத் தந்த தகவலின் அடிப்படையில் புதருக்குள் தேடிய பொழுது சுமார் 8 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டு பலகை கல்லில் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அதனைச் சுத்தம் செய்து பார்த்த பொழுது அச்சிற்பம் சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு சிற்பம் என்று கண்டறியப்பட்டது. இச்சிற்பமைதியும் கொற்றவை சிற்பத்தின் காலத்தை ஒட்டியதாகவே இருக்கிறது. கொற்றவை சிலைக்குச் செவ்வாய் வெள்ளிகளில் ஊர் மக்கள் வழிபடுவதோடு காணும் பொங்கல் , சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் ஊர் பொதுவாகப் பொங்கல் வைத்து கோழி பலி கொடுக்கப்பட்டு சிறப்புடன் வழிபாட்டிலிருந்த பொழுதிலும் , அதே காலகட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் கேட்பார் அற்று புதருக்குள் இருப்பது வேதனையான விசயமாகும். சுமார் 1300 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை மற்றும் விஷ்ணு சிற்பத்தை ஊர்மக்கள் முறையாகப் பாதுகாத்திடக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+