கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன்.. சிபிசிஐடியிடம் ஒப்படைத்த பெற்றோர்.. அடுத்தக்கட்ட ஆக்சன் என்ன?
விழுப்புரம்: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடியிடம் அந்த மாணவியின் பெற்றோர் இன்று ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த நாள் முதலாக இப்போது வரை பல்வேறு மர்மங்களும், யூகங்களும் ஸ்ரீமதி மரணத்தை சுற்றி உலவி வருகிறது.
மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என அவரது பெற்றோர் தரப்பிலும், ஊர் மக்கள் தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், வேறு காரணங்களுக்காக மாணவி இறந்திருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

விசாரணை நடத்தும் சிபிசிஐடி
இதனிடையே, தனது மகள் மரண வழக்கில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீமதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும், பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.

ஒப்படைக்கப்படாத செல்போன்
இது ஒருபுறம் இருக்க, மரணம் அடைந்த மாணவியின் செல்போனை ஆராய்ந்தால் மட்டுமே அவர் எப்படி இறந்தார் என்ற உண்மைகளை கண்டறிய முடியும் என சிபிசிஐடி கூறியது. ஆனால், மாணவியின் பெற்றோரோ செல்போனை ஒப்படைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, மாணவியின் செல்போனை ஒப்படைக்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

"செல்போனை ஒப்படையுங்கள்"
இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் விசாரித்த நீதிபதி, "உடற்கூறாய்வு மூலம் ஒருவர் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம். நியாயமான விசாரணையை கேட்கும் மனுதாரர், தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும், செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கும் அவர் உத்தரவிட்டார்.

செல்போன் ஒப்படைப்பு
அதன்படி, விழுப்புரத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு இன்று வந்த மாணவியின் பெற்றோர், அவர் பயன்படுத்தி வந்த செல்போனை வஒப்படைத்தனர். இருந்தபோதிலும், மாணவியின் செல்போனை பெற மறுத்துவிட்ட விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி, அதனை சிபிசிஐடி விசாரணை அலுவலரிடம் நேரடியாக வழங்கி அதற்கான ஒப்புதல் சான்றை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி முன்னிலையில் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதியிடம் செல்போனை ஒப்படைத்தனர். இதையடுத்து, மாணவியின் பெற்றோரிடம் ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications