கழிவறை தண்ணீரை குடிக்கும் தவெக தொண்டர்கள்.. வசதிகள் போதுமானதாக இல்லாததால் அதிர்ச்சி!
விழுப்புரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக தொண்டர்கள் பங்கேற்றிருப்பதால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தொண்டர்கள் கழிவறைக்கு பயன்படுத்த இருந்த நீரை குடிநீராக உபயோகித்து வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம், அரசியலிலும் வஞ்சனை காட்டாமல் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதிலும் சினமா துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு தமிழ்நாடு கூடுதல் முக்கியத்துவத்தையே கொடுத்து வருகிறது. அதனால்தான் எம்ஜிஆர் தொடங்கி உதயநிதி வரை அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிக்கணக்கை துவங்க, விஜய்யும் புதிய அரசியலை கட்சியை ஆரம்பித்துள்ளார். கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என பெயரிடப்பட்டதிலிருந்து, கொடி, பாடல் அறிமுகமானது வரை எதிர்பாரப்புகள் எகிற தொடங்கியுள்ளன.

இப்படி இருக்கையில்தான் முதல் மாநாடு குறிப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மாநாடு முதலில் மதுரையில் நடத்தப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் திருச்சிதான் சரியாக இருக்கும் என மாற்றப்பட்டது. இறுதியில் தற்போது விக்கிரவாண்டி ஃபைனல் செய்யப்பட்டு மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் மாநாடு என்பதால் ஏற்பாடுகள் அனைத்தும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. 50,000 சேர்கள், 2 லட்சம் பேர் கூடும் அளவுக்கான திடல், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பார்க் செய்ய இடம் என அனைத்தும் ரெடியானது.
குறிப்பாக மாநாட்டுக்கு வரும் பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்களுடன் சேர்த்து கர்ப்பிணிகளுக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டது. மாநாட்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டதால், அவர்களுக்கான உணவை மாவட்ட நிர்வாகிகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. மேலும், தொண்டர்களை ஒருங்கிணைக்க மாவட்டத்திற்கு 250 பேர் வீதம் சுமார் 10,000 தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், குழந்தைகள் காணாமல் போனால் கண்டறிய தனி இடமும், முதல் உதவிக்கு 100 மருத்துவர்களும் மாநாட்டில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தவிர, மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் கவனமாக வரவேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியிருந்தார். குடி உள்ளிட்ட போதையை மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் பயன்படுத்த கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இவ்வளவு செய்தும், குடிநீர், கழிப்பறை, நிழற்குடை உள்ளிட்ட விஷயங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் பயங்கரமாக சொதப்பியுள்ளனர்.
குறிப்பாக தொண்டர்கள் பலரும் குடிநீர் கிடைக்காததால் வெயிலில் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். குடிநீர், தேவையை விட மிகக்குறைவாகவே விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் கிடைக்காததால், கழிவறைக்கு பயன்படுத்த வைத்திருந்த நீரை தொண்டர்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications