அரசியல்வாதிகள் சிபாரிசு கிரிக்கெட்டில் எடுபடாது! தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி உறுதி!
விழுப்புரம்: அரசியல்வாதிகள் சிபாரிசை மட்டும் வைத்துக் கொண்டு யாரும் கிரிக்கெட்டிற்குள் வர முடியாது என தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே கிரிக்கெட்டில் அங்கீகாரம் கிடைக்கப்பெறும் என அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இளைய மகன் அசோக் சிகாமணி சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கிரிக்கெட் மீது தீவிர ஈடுபாடு உடைய இவர், அண்மையில் தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்பா அமைச்சராக இருக்கிறார் என்பதற்காக இந்தப் பதவி அவருக்கு கிடைத்துவிட்டது எனக் கூற முடியாது. காரணம் கிரிக்கெட் சங்க விவகாரத்தில் பெரும் பெரும் தலைகளை தாண்டி அரசியல்வாதிகளால் எதுவும் செய்ய முடியாது.

கிரிக்கெட் மைதானம்
இதனிடையே விழுப்புரத்தில் தங்களுக்கு சொந்தமான சூர்யா கல்வி குழுமத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்த தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையாது என்றும் அரசியல்வாதிகள் சிபாரிசை மட்டும் வைத்துக் கொண்டு யாரும் கிரிக்கெட்டிற்குள் வர முடியாது எனவும் தெரிவித்தார். கிரிக்கெட்டில் ஜொலிக்க அரசியல் பின்புலம் இருந்தால் மட்டும் போதுமானது என்றால் சச்சின் டெண்டுல்கர் மகன் இந்திய அணியில் இந்நேரம் தேர்வாகி இருக்க முடியுமே என்றார்.

திறமை முக்கியம்
திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே கிரிக்கெட்டில் அங்கீகாரம் கிடைக்கப்பெறும் எனக் கூறிய அவர் திறமை மிக்கவர்களால் மட்டுமே கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திறமை இருந்தும் அது வெளியே தெரியாமல் பலர் இருக்கிறார்கள் என்று தெரிவித்த அசோக் சிகாமணி, கிராமப்புறங்களில் அதிகமானோர் கிரிக்கெட்டில் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

தமிழக கிரிக்கெட் சங்கம்
மேலும், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் சங்கங்களிலேயே தமிழக கிரிக்கெட் சங்கம் தான் பாரம்பரிய பின்னணியை கொண்டது என்று பெருமிதம் தெரிவித்த அவர், தமிழகத்தில் கிராமப் புறங்களில் கிரிக்கெட்டில் திறமை மிக்கவர்களாக விளங்குபவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர தாம் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications