செளமியாவுக்கு செக்.. அன்புமணி முன் மகள் காந்திமதியை மேடையேற்றும் ராமதாஸ்.. பாமகவில் நடப்பது என்ன?
விழுப்புரம்: பாமக சார்பாக நடத்தப்படும் மகளிர் மாநாட்டில் ராமதாஸ் மகள் காந்திமதி மேடையேறப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் பூம்புகாரில் நடக்கும் இந்த மாநாட்டில் சௌமியா அன்புமணி கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் மருமகளுக்குப் பதிலாக அந்த இடத்தை மகளை வைத்து நிரப்ப ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் 8 மாதங்களாக நடந்து வருகிறது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்ட நாள் தொடங்கி, இப்போது வரை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் ராமதாஸ் முன் வைத்திருந்தார்.

அதேபோல் பாமகவில் சௌமியா அன்புமணியின் தலையீடு அதிகமிருப்பதாகவும் கவலையை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக பாஜக ராமதாஸ் அணியாகவும், அன்புமணி அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகிறது. அன்புமணி பக்கம் நிற்கும் நிர்வாகிகளைப் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டு வருகிறார். இந்த நிலையில் பாமக சார்பாக ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாமக மாநாடு நடக்கவிருப்பதால், அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே பூம்புகார் மாநாடு நடக்கும் பகுதிக்கு ராமதாஸ் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார். இதன்பின் பாமக இணை பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான அருள் மாநாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த மாநாட்டில் 5 லட்சம் மகளிரைப் பங்கேற்க வைக்க பாமக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் மகளிர் மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ராமதாஸ், மாநாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று பதில் அளித்தார். ஆனால் பாமக சார்பாக அடிக்கப்பட்ட போஸ்டர், நோட்டீஸ்களில் அன்புமணியின் பெயர் விடுபட்டது.
இந்த நிலையில் பூம்புகாரில் நடக்கவுள்ள பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸ் மகள் காந்திமதியை மேடையேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான பாமக செயற்குழு கூட்டத்தில், காந்திமதி முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இதன்பின் பாமக நிர்வாகிகள் அவரை மேடையேற்றி அமர வைத்தனர்.
அனைவருக்கும் வணக்கம் கூறிவிட்டு, காந்திமதி மேடையில் அமர்ந்தார். இதன்பின் காந்திமதிக்கு பாமகவில் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, போகப் போக தெரியும் என்று பாடலைப் பாடி பதில் அளித்திருந்தார். அதேபோல் பூம்புகார் மகளிர் மாநாட்டில் சௌமியா அன்புமணி பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இதற்கு முன் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணி, சௌமியா அன்புமணி, அவரது மகள் சங்கமித்ரா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அதில் மகள் சங்கமித்ரா மாநாட்டின் பணிகளை முன்னின்று நடத்தி இருந்தார். ஆனால் மகளிர் மாநாட்டில் சௌமியா அன்புமணி பங்கேற்காமல் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அக்கட்சி நிர்வாகிகளிடையே விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications