தவறிட்டீங்களே.. டெல்லியை கவனிக்க வைத்த கள்ளச்சாராய உயிரிழப்புகள்.. தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான நிலையில், அது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர்... இன்னும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சையை பெற்றுவருகின்றனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்தனர்.. அந்தவகையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

உலுக்கிய சம்பவம்: இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது.. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.. அதேபோல, அதிகாரிகளும் துறைரீதியாக மாற்றப்பட்டுள்ளனர்..
இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரத்தை, தேசிய மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து வழக்கை எடுத்துள்ளது.. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஊடகத்தில் வெளியான தகவல் உண்மையானால், அது மக்களின் வாழ்வுரிமையை மீறுவதாகும்.. இதன்மூலம் கள்ளச்சாராய விற்பனையையும், அதை குடிப்பதையும் தமிழக அரசு தடுக்க தவறிவிட்டது வெளிப்படையாக தெரிகிறது..
மனித உரிமை மீறல்: எனவே, இந்த கள்ளச்சாராயம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு சம்பவத்துக்கு காரணமானதுடன், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய கடமை தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்துவதுடன், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்திலும், போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்: அதனடிப்படையில், குன்னூர் அருகே ஆடர்லி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மேல் குன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் போலீசார் ஆடர்லி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு செடி ஒன்று வளர்ந்து இருந்ததை பார்த்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் அரிசி, வெல்லம், செடியின் இலைகளை கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து 10 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியதாக ஆடர்லியை சேர்ந்த சுக்குபோனா என்ற 48 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதைதவிர தமிழகம் முழுவதும் தீவிரமான வேட்டையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்












Click it and Unblock the Notifications