விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜர்: நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய எஸ்.பி இருவரையும் இன்று நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சிறப்பு டிஜிபியும் எஸ்.பியும் நேரில் ஆஜரானார்கள்.
Recommended Video
கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது முதல்வர் பாதுகாப்பை ஆய்வு செய்ய வந்த சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார்.

சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியை தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார், அப்போது சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார். அப்போது அவரை சென்னை வரவிடாமல் தடுத்ததாக செங்கல்பட்டு எஸ்.பி மீதும் புகார் எழுந்தது.
இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போதைய தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், 72 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இரு அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து, டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை முடித்தது தொடர்பாக, டிசம்பர் 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-ல், நடுவர் முன்பு அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதி சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமை யிலான போலீஸார் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி 2 பேருக்கும் சம்மன் அனுப்பி ஆக 9 ஆம் தேதி (இன்று) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இரண்டு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய எஸ்.பி இருவரும் விழுப்புரம் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் நேரில் ஆஜரானார்கள்.
வழக்கு விசாரணை தற்போது தொடங்கியுள்ளது, இன்று ஆஜரான இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. சிறப்பு டிஜிபி தரப்பில் தனது தரப்பை விளக்கி வாதாடலாம் என தெரிகிறது. அதன் பின்னர் நீதிபதி அடுத்த உத்தரவை பிறப்பிப்பார் என தெரிகிறது.
இந்த வழக்கில் ஆஜரான சிறப்பு டிஜிபி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ததில் அவருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications