தவெக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து! உணர்ச்சி பிழம்பான நடிகர் விஜய்
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நடிகர் விஜய் உள்பட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த் தாயை வணங்கினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடைக்கு சரியாக 4 மணிக்கு விஜய் வந்தார். அவர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தார். சிறிது நேரம் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அவர் கட்சி நிர்வாகிகள் வழங்கிய பூங்கொத்தை பெற்றுக் கொண்டார். பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் நோக்கி ஓடி வந்தார்.

தொண்டர்களை நோக்கி கையசைத்த அவருக்கு கட்சி கொடி பதித்த துண்டுகள் ரேம்ப் நோக்கி வீசப்பட்டன. கீழே விழுந்த துண்டை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டார். பிறகு நிறைய துண்டுகள் விழுந்த போது அதில் சிலவற்றை கேட்ச் பிடித்தபடியே அணிந்து கொண்டார்.
100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி நடிகர் வைத்தார். அப்போது அவர் உணர்ச்சி பிழம்பாக காணப்பட்டார். அப்போது கட்சியின் கொடி பாடல் இசைக்கப்பட்டது. தலைவர் கொடி பறக்குது என்ற பாடல்தான் ஒலிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள் பலர் நடனமாடி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களை பார்த்து கையசைத்தார் விஜய். பிறகு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பாடலை அனைவரும் எழுந்து நின்று பாடினர். இந்த தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பிறகு கட்சயின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழியை வாசித்தார். அதை நெஞ்சில் கை வைத்தபடி விஜய்யும் தொண்டர்களும் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைகாட்சி அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டமும் டிடி தொலைக்காட்சியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியும் கடந்த வாரம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் திக்கி திணறி பாடிய நிலையில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல திருநாடும்" என்ற வரி தவிர்க்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ஆளுநரை திரும்பப் பெறுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு தமிழக அரசின் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வார்த்தைகள் தவறாக வாசிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஒரு முறை தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இருந்து வாசிக்கப்பட்டது. தமிழக அரசின் விழாவிலேயே தவறாக தமிழ்த்தாய் பாடப்படுகிறதா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications