தேவையில்லாமல் நகர் வலம் வந்த 50 கார்கள் பறிமுதல்.. விழுப்புரம் போலீசார் அதிரடி
விழுப்புரம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 4 வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விழுப்புரம் நகரில் அத்தியாவசிய தேவைகளின்றி இயக்கப்பட்ட 50 கார் மற்றும் 20 ஆட்டோக்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மட்டும் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 292 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 24 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 73 பேர் 4 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 991 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் 4 வது கட்டமாக வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்கிறார்களா?
அத்தியாவசிய தேவையை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் வாகனங்களில் சுற்றுகிறார்களா? என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையை தவிர மற்ற தேவைகளுக்காக கார்கள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட 50 கார்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அதன் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் அத்தியாவசிய தேவைகள் இன்றி நகரில் உலா வந்துகொண்டிருந்த 20 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் விழுப்புரம் நகரில் வாகனப் போக்குவரத்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications