திமுகவின் பொன்முடி வென்றால்... 6 மாதங்களில் நிச்சயம் இடைத்தேர்தல் தான்.. பாஜகவின் நாராயணன் ஓபன் டாக்
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் ஆறு மாதங்களில் நிச்சயம் இடைத்தேர்தல் வரும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் VAT. கலிவரதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் இன்று பிரசாரம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் வரும் என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகள்
மேலும் பேசிய அவர், "திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பொன்முடி இந்துக்களுக்கு எதிரானவர் மட்டுமல்ல, இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தவர். அதன் காரணமாக பல்வேறு வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். செம்மண் குவாரியில் பல்வேறு ஊழல்களைச் செய்து, மலைகளை அழித்து, பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான குவாரிகளை நடத்தி வருகிறார்.

நிலுவையில் உள்ளது
கனிமவளக் கொள்ளை அடித்ததாக இவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. பொன்முடி அமைச்சராக இருந்தபோது சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்திற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசு நிலங்களை வளைத்து நில அபகரிப்பு செய்ததன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தனி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இடைத்தேர்தல் வரும்
இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வரும். பொன்முடி உறுதியாகத் தண்டிக்கப்படுவார். இந்த சூழ்நிலையில் திருக்கோவிலூரில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் பொன்முடி வெற்றி பெற்றால், குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் கட்டாயம் இடைத்தேர்தல் வரும். ஏனெனில், உறுதியாக அவர் அந்த வழக்கில் தண்டிக்கப்படுவார்.

சிறை உறுதி
மேலும், நில அபகரிப்பு என்பது திமுகவின் பாரம்பரிய சொத்தாக உள்ளது. இதில் பொன்முடி விதிவிலக்கல்ல. அதிகாரத்தில் இருக்கும்போது தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் வழக்கில், பொன்முடிக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டாலும் கூட அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்" எனத் தெரிவித்தார்.