அப்பாடா.. UPI பண மோசடிகளுக்கு செக்! இன்று முதல் புதிய நடைமுறை அமல்! ஆக்ஷனில் இறங்கிய என்பிசிஐ!
சென்னை: யுபிஐ மூலம் பணம் அனுப்புவது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்ட நிலையில், மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், யுபிஐ மூலம் நடைபெறும் பண மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இனி யுபிஐ செயலிகளில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் போது, பணத்தை பெறுபவரின் வங்கி பதிவில் உள்ள உண்மையான பெயர் மற்றும் தொடர்புடைய விவரங்கள் பயனாளரின் திரையில் தெளிவாகக் காண்பிக்கப்படும். இதன் மூலம் தவறான கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுவதை தடுக்க முடியும் என்கிறது என்பிசிஐ.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய சேவையாக யுபிஐ மாறியுள்ளது. சிறிய தேநீர் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை பெரும்பாலான இடங்களில் தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளே நடைபெற்று வருகின்றன.

கையில் ரொக்கம் வைத்துச் செல்லாமல், மொபைல் போன் மூலமாகவே பணம் செலுத்தும் பழக்கம் மக்களிடையே வேகமாக அதிகரித்துள்ளது. போன்பே, கூகுள் பே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலமாக தினமும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
யுபிஐ
வங்கி கணக்குடன் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதால், சில வினாடிகளிலேயே பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. ஆனால் யுபிஐ பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து மோசடி சம்பவங்களும் அதிகரித்தன. போலியான பெயர்கள், தவறான க்யூஆர் குறியீடுகள், வணிக நிறுவனங்களின் பெயர்களை ஒத்த பெயர்களில் கணக்குகள் உருவாக்குதல் போன்ற வழிகளில் பலர் ஏமாற்றப்பட்டனர். இதனால் பணம் அனுப்பும் நபர் உண்மையில் யாருக்கு பணம் செலுத்துகிறார் என்பது குறித்து தெளிவான தகவல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.
என்பிசிஐ
இந்த நிலையில், தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இனி யுபிஐ பரிவர்த்தனை செய்யும்போது, பெறுநரின் வங்கி பதிவில் உள்ள பெயரே திரையில் காண்பிக்கப்படும். பயனாளர் விருப்பப்படி வைத்திருக்கும் பெயர்கள் அல்லது க்யூஆர் குறியீட்டில் இடம்பெறும் பெயர்கள் மட்டும் காட்டப்படாது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
இதனால், "இந்த பெயருக்குத்தான் பணம் அனுப்புகிறோமா?" என்பதை பணம் செலுத்தும் நபர் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக புதிய நபர்களுக்கு பணம் அனுப்பும் போது அல்லது ஆன்லைன் கொள்முதல் செய்யும் போது இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, யுபிஐ சேவையில் மேலும் சில மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. தினசரி வங்கி இருப்பு தொகையை சரிபார்ப்பதற்கும், இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை பார்க்கவும் குறிப்பிட்ட வரம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நேர கட்டுப்பாடுகள்
தானியங்கி கட்டண வசதிகளுக்கும் புதிய நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யுபிஐ சேவையின் செயல்திறனை மேம்படுத்தவும், சர்வர் அழுத்தத்தை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளாகும். புதிய நடைமுறைகள் காரணமாக, இனி பணம் அனுப்பும் முன் பெறுநரின் உண்மையான பெயரை சரிபார்த்து உறுதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
யுபிஐ மோசடி
இதனால் தவறான கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுவது குறைவதோடு, யுபிஐ மோசடிகளையும் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டிருப்பதாக என்பிசிஐ கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications